தூத்துக்குடி துப்பாக்கி சூடு 3-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு


தூத்துக்குடி துப்பாக்கி சூடு 3-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
x
தினத்தந்தி 23 May 2021 12:16 AM IST (Updated: 23 May 2021 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவர்களது உருவப்படங்களுக்கு பொதுமக்கள் மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது நடந்த கலவரத்தால் போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். 

இந்த சம்பவத்தின் 3-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் அரசு விதிமுறைகளை பின்பற்றி, ஏற்கனவே போராட்டம் நடந்த பகுதிகளில் பலியானவர்களின் உருவப்படங்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது

அதன்படி அ.குமரெட்டியபுரம், தெற்கு வீரபாண்டியபுரம், பண்டாரம்பட்டி, சில்வர்புரம், மடத்தூர், பாத்திமாநகர், காந்திநகர், லயன்ஸ்டவுன், பூபாலராயர்புரம், திரேஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் அலங்கரித்து வைக்கப்பட்ட 13 பேரின் உருவப்படங்களுக்கு மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களின் வீடுகளில் உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். கல்லறைகளிலும் உறவினர்கள் மரியாதை செலுத்தினர். கல்லறைகளில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள், இறந்தவர்களின் தியாகங்களை போற்றும் வகையிலும், அவர்களின் லட்சியம் வெல்லும் வகையிலும் தொடர்ந்து பாடுபடுவோம் என்று உறுதிமொழி ஏற்றனர். 

நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு கிருஷ்ணமூர்த்தி, மகேஷ், ராஜேஷ் மற்றும் பேராசிரியை பாத்திமா பாபு உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டனர். 6 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 12 துணை போலீஸ் போலீஸ் சூப்பிரண்டுகள், 55 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஸ்டெர்லைட் நிறுவனம் முன்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வஜ்ரா வாகனம், தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வாகனம், கண்ணீர் புகை குண்டு வீசும் வாகனம் உள்ளிட்டவையும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

Next Story