பெண் வீட்டின் முன்பு என்ஜினீயர் தீக்குளித்து தற்கொலை


பெண் வீட்டின் முன்பு என்ஜினீயர் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 23 May 2021 12:27 AM IST (Updated: 23 May 2021 12:27 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி அருகே ஒருதலைக்காதல் காரணமாக பெண் வீட்டின் முன்பு என்ஜினீயர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

காரைக்குடி,

காரைக்குடி அருகே ஒருதலைக்காதல் காரணமாக பெண் வீட்டின் முன்பு என்ஜினீயர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஒருதலைக்காதல்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள தர்மபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய் (வயது 25). இவர் காரைக்குடி அருகே உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. படித்தவர். அப்போது தன்னுடன் படித்த காரைக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மாணவியை விஜய் ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதை அறிந்ததும் அந்த மாணவி அவரோடு பேசுவதை நிறுத்திக் கொண்டார். ஆனால் விஜய், அந்த மாணவியை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்.

பெண் கொடுக்க மறுப்பு

அதன்படி சமீபத்தில் அந்த பெண்ணிற்கு வேண்டியவர்களிடம் சென்று தான் காதலித்த பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கூறி உள்ளார். அவர்களோ பெண் தர இயலாது என விஜய்க்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர். அப்போது விஜய் பெண் தரவில்லையென்றால் தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டியதாக தெரிகிறது.
இதுகுறித்து பெண்ணின் தரப்பினர் காரைக்குடி அணைத்து மகளிர்காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

தீக்குளித்து தற்கொலை

இந்த நிலையில் விஜய் அந்த பெண்ணின் வீட்டிற்கு நேற்று சென்றார். அங்கு அவரது வீட்டின் முன் நின்று தன் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். தீ மளமளவென அவர் மீது பற்றி எரிந்தது. இதில் அவர் அலறினார்.
அவரது அலறல் சத்தத்தில் அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்து தீயை அணைத்தனர். ஆனால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காரைக்குடி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருதலைக்காதல் காரணமாக பெண் வீட்டு முன்பு என்ஜினீயர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story