காரைக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே களப்ப காடு பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (வயது 24). இவருக்கும் புதுவயல் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் (30) என்பவருக்கும் கடந்த 17-ந் தேதி புதுவயலில் திருமணம் நடைபெற்றது.இந்நிலையில் சூர்யா காரைக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:- திருமணம் முடிந்த அன்று முதலிரவின்போது வெற்றிவேல் அவரது மனைவி சூர்யாவிடம் திருமணத்திற்கு முன்பு கொடுப்பதாகச் சொன்ன நகை மற்றும் பணத்தை முழுமையாக உனது பெற்றோர் எனக்கு தராமல் ஏமாற்றி விட்டனர். என்னோடு வாழ வேண்டுமானால் அந்த பணத்தையும் நகையையும் நீ வாங்கி வரேவண்டும் என வாக்குவாதம் செய்தார்.வாக்குவாதம் முற்றவே சூர்யாவை தாக்கி கழிவறையில் தள்ளி தலைமுடியை வெட்டி உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று கூறி அவர் மறைத்து வைத்திருந்த மாத்திரைகளை வலுக்கட்டாயமாக சூர்யாவின் வாயில் திணித்துள்ளார். அதனால் சூர்யா மயக்க நிலைக்கு அடைந்தவுடன் ஆம்புலன்ஸ் மூலமாக அவரை புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இது குறித்து விவரம் அறிந்த சூர்யாவின் பெற்றோர் சாக்கோட்டை போலீசில் புகார் கொடுத்துள்ளனர். மறுநாள் சாக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக வந்து விட்டு திரும்பும்போது வெற்றிவேலும் அவரது குடும்பத்தாரும் சூர்யாவையும் அவரது பெற்றோர்களையும் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இதுகுறித்து காரைக்குடி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.