நீலகிரி மாவட்டத்தில் அனைத்து கடைகளும் திறப்பு


நீலகிரி மாவட்டத்தில் அனைத்து கடைகளும் திறப்பு
x
தினத்தந்தி 23 May 2021 12:33 AM IST (Updated: 23 May 2021 12:56 AM IST)
t-max-icont-min-icon

நாளை முதல் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், நேற்று நீலகிரி மாவட்டத்தில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டது. ஆனால் வாடிக்கையாளர்கள் கூட்டம் குறைந்தது.

ஊட்டி,

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி அத்தியாவசிய கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை செயல்பட்டு வந்தது. ஞாயிற்றுக்கிழமை தோறும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. 

அதன்படி நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நேற்று காலை 10 மணிக்கு முன் அத்தியாவசிய பொருட்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பின்னர் கடைகள் அடைக்கப்பட்டன. 

அதன்பின்னர் நேற்றும், இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணி வரை அனைத்து கடைகளையும் திறக்கலாம், நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 31-ந் தேதி வரை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இதனால் ஊட்டியில் காலை 10 மணிக்கு அடைக்கப்பட்ட அத்தியாவசிய கடைகள் மாலை 3 மணிக்கு மேல் படிப்படியாக திறக்கப்பட்டது. ஊட்டி நகராட்சி மார்க்கெட், ஏ.டி.சி., கமர்சியல் சாலை, சேரிங்கிராஸ், பிங்கர்போஸ்ட் என அனைத்து பகுதிகளிலும் காய்கறி, தேநீர், மளிகை, பேக்கரி, துணிக்கடைகள் திறக்கப்பட்டன. 

அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. காலையில் பொதுமக்கள் அதிகம் பேர் வாங்கி சென்றதால் மாலையில் கடைகள் திறந்தும் குறைந்த நபர்களே வந்தனர். இதேபோல் வாகன போக்குவரத்தும் குறைவாக இருந்தது. 

கூடலூர், பந்தலூர், மசினகுடி, நடுவட்டம், டி.ஆர்.பஜார், கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட இடங்களில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டது. ஆனால் காலையில் அத்தியாவசிய பொருட்களை மக்கள் அதிகளவு வாங்கி சென்றதால் திறந்திருந்த கடைகளில் வாடிக்கையாளர்கள் வரத்து எதிர்பார்த்த அளவு இல்லை. 

மேலும் பரவலாக மழை பெய்ததால் முக்கிய சாலைகளில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில் நோய் தொற்று அதிகரித்து வருவதால் தளர்வு இ்ல்லா முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. 

மேலும் முந்தைய 2 நாட்கள் அனைத்து கடைகளையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் காலையில் அரசு அனுமதித்த நேரத்தில் தேவையான பொருட்களை மக்கள் வாங்கி சென்றுவிட்டனர். இதனால் வாடிக்கையாளர் கூட்டம் இல்லை என்றனர்.

நாளை (திங்கட்கிழமை) முதல் அனைத்து கடைகளும் மூடப்படுவதால், கடைகளில் பொருட்கள் வாங்க இன்று பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதுடன், கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Next Story