நெல் மூட்டைகளை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல கோரிக்கை
நெல் மூட்டைகளை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விக்கிரமங்கலம்:
நெல் மூட்டைகள்
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தா.பழூர் வரை உள்ள டெல்டா பகுதிகளில் கடந்த மாதம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், அந்தந்த மையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை, அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் பாதுகாத்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் நெல்மூட்டைகள் நனையாமல் இருக்க, அந்த மையங்களில் இருந்த தார்ப்பாய்களை கொண்டு மூடி உள்ளனர். அதிக அளவு மழை பெய்தால் மூட்டைகளுக்கு உள்ளே தண்ணீர் புகுந்து நெல்மணிகள் சேதமடையும் சூழல் உள்ளது. குறிப்பாக ஸ்ரீபுரந்தான் நெல் கொள்முதல் நிலையத்தில் மழையிலும், வெயிலிலும் நெல் மூட்டைகள் கிடப்பதால், முளைத்து விரைவில் சேதமடையும் என்று தெரிகிறது.
கோரிக்கை
கடந்த ஆண்டு இதேபோல் ஒரு சில மையங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, சேதமடைந்து மூட்டையின் உள்ளேயே நெல்மணிகள் முளைத்துவிட்டது. அதேபோல் இந்த ஆண்டும் நடந்து விடக்கூடாது என்றும், மக்களின் வரிப்பணத்தில் வாங்கப்பட்ட நெல்மூட்டைகள் சேதம் அடையாமல் தடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story