நாளை முதல் முழு ஊரடங்கு: சேலத்தில் மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் திறப்பு பொருட்கள் வாங்க அலைமோதிய கூட்டம்
நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால் சேலத்தில் நேற்று மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் திறக்கப்பட்டன. இதனால் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
சேலம்:
நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால் சேலத்தில் நேற்று மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் திறக்கப்பட்டன. இதனால் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் முழு ஊரடங்கு நாளை (திங்கட்கிழமை) முதல் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த நாட்களில் மளிகை, காய்கறி, இறைச்சி உள்ளிட்ட எந்த கடைகளும் திறக்க அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி நேற்று இரவு 9 மணி வரையிலும், இன்று (ஞாயிறுக்கிழமை) ஒரு நாள் மட்டும் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கலாம் என தமிழக அரசு நேற்று பிற்பகல் அறிவித்தது.
இதனை டி.வி.யில் பார்த்து தெரிந்து கொண்ட பொதுமக்கள் பொது முடக்கம் முடியும் வரை தங்களது வீடுகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியில் புறப்பட்டனர். மேலும் சேலம் மாநகரில் நேற்று மாலை 4 மணிமுதல் மளிகை, காய்கறி, இறைச்சி உள்ளிட்ட பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன.
கூட்டம் அலைமோதியது
குறிப்பாக அஸ்தம்பட்டி, மணக்காடு, அழகாபுரம், செவ்வாய்பேட்டை, லீ பஜார், பால் மார்க்கெட், பெரமனூர், அம்மாபேட்டை, கிச்சிபாளையம், சூரமங்கலம், அன்னதானபட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மளிகை கடைகள் திறக்கப்பட்டன. மேலும் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கடைகள் திறக்கப்பட்டன.
இதனை அறிந்த பொதுமக்கள் ஒரு வாரத்திற்கு தேவையான மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க திரண்டனர். இதனால் அனைத்து கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. கொரோனா பரவல் காரணமாக வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடன் நின்று பொருட்களை வாங்கி சென்றதை காண முடிந்தது. செவ்வாய்பேட்டையில் பொதுமக்கள், வியாபாரிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இறைச்சி கடைகள்
அதேசமயம் பொதுமக்களுக்கு பொருட்களை வினியோகம் செய்ய முடியாமல் மளிகை கடைக்காரர்கள் திணறினர். நேற்று மாலை முதல் இறைச்சி கடைகளும் திறக்கப்பட்டன. இதனால் ஒரு சிலர் ஆடு மற்றும் கோழி இறைச்சிகளை வாங்கிச் சென்றனர். காய்கறி கடைகளும் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை மொத்தமாக வாங்கி சென்றனர்.
அதே சமயம் சரியாக இரவு 9 மணி ஆனவுடன் மளிகை, காய்கறி உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனிடையே, நேற்று இரவில் அனைத்து சாலைகளிலும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்ததை காண முடிந்தது.
Related Tags :
Next Story