திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து டிரைவர் பலி; 2 பேர் படுகாயம்
திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
தாளவாடி,
தாளவாடி அருகே உள்ள திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இது தமிழகம்-கர்நாடக மாநிலம் இடையே முக்கிய பாதையாக உள்ளது.
குறுகிய வளைவுகளை கொண்டதால் இந்த மலைப்பாதை வழியாக அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரி போன்ற கனரக வாகனங்கள் அடிக்கடி பழுதாகி நடுரோட்டில் நின்று விடுகிறது. ஒரு சில நேரம் பாரம் தாங்காமல் கவிழ்ந்து விபத்தும் ஏற்படுகிறது. இதனால் உயிரிழப்பு நிகழ்வதும், பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதும் வாடிக்கையாகி வருகிறது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் ஹுப்ளியில் இருந்து கோவைக்கு கல் உடைக்கும் எந்திரத்தை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை கர்நாடக மாநிலம் சிக்கான் தாலுகாவை சேர்ந்த துர்கப்பா (வயது 32) என்பவர் ஓட்டினார். அவருடன் ஹுப்ளியை சேர்ந்த லாரி உரிமையாளர் மற்றொரு துர்கப்பா, அவருடைய நண்பர் நாகராஜ் ஆகியோர் இருந்தனர்.
இந்த லாரி காலை 9.15 மணி அளவில் திம்பம் மலைப்பாதை 25-வது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது பாரம் தாங்காமல் ரோட்டோரத்தில் உள்ள 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் கல் உடைக்கும் எந்திரத்தின் அடியில் டிரைவர் துர்கப்பா சிக்கிக்கொண்டார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
நாகராஜும், மற்றொரு துர்கப்பாவும் லாரியின் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்து அலறி துடித்தனர். சத்தம் கேட்டு அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் ஆசனூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து தீயணைப்பு துறையினரும், போலீசாரும் அங்கு சென்று இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை போராடி மீட்டனர். இதைத்தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 2 பேருக்கும் முதல்-உதவி சிகிச்சை அளித்தனர். அதன்பின்னர் பண்ணாரியில் இருந்து கிரேன் அங்கு வரவழைக்கப்பட்டது.
கிரேன் உதவியுடன் தீயணைப்பு துறையினர் கல் உடைக்கும் எந்திரத்தை அப்புறப்படுத்தி இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அதன்பின்னர் 2 பேரும் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு 2 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இறந்த டிரைவர் துர்கப்பாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story