அந்தியூர், தாளவாடி பகுதியில் கொரோனாவுக்கு மின்வாரிய ஊழியர் உள்பட 3 பேர் பலி- மேலும் 102 பேருக்கு தொற்று


அந்தியூர், தாளவாடி பகுதியில் கொரோனாவுக்கு மின்வாரிய ஊழியர் உள்பட 3 பேர் பலி- மேலும் 102 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 23 May 2021 4:53 AM IST (Updated: 23 May 2021 5:03 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர், தாளவாடி பகுதியில் கொரோனாவுக்கு மின்வாரிய ஊழியர் உள்பட 3 பேர் பலியானார்கள். மேலும் 102 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

ஈரோடு,

அந்தியூர் அருகே உள்ள மைக்கேல்பாளையம் ஊராட்சி நஞ்சமடைகுட்டை கிராமத்தில் சுகாதார பணியாளர்கள் வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்தனர். இதில் 65 வயது ஆணுக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதியானது. இதைத்தொடர்ந்து  அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு மருந்து, மாத்திரை சாப்பிட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று காலை அவருக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

அதேபோல் மைக்கேல்பாளையம் பகுதியை சேர்ந்த 65 வயதான ஆணுக்கு சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா பரிசோதனை எடுத்தனர். இதில் அவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அவர் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அதிகாலை அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுதவிர அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசம் புதூர் பகுதியைச் சேர்ந்த 42 வயது பெண், சந்தியபாளையம் பகுதியைச் சேர்ந்த 41 வயது பெண், தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 45 வயது பெண், வெள்ளையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 60 வயது பெண், செம்புளிச்சாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 48 வயது பெண், கள்ளிமடை குட்டை பகுதியைச் சேர்ந்த 60 வயது பெண் உள்பட 37 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் அந்தியூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்டு்ள்ள கொரோனா சிகிச்சை மையம் மற்றும் தனியார் மருத்துவமனை, ஈரோடு அரசு ஆஸ்பத்திரி, பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு் வருகிறது.

தாளவாடி அருகே உள்ள பாரதிபுரத்தை சேர்ந்தவர் 58 வயது ஆண். இவர் தாளவாடியில் மின்சார வாரிய ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி மின்வாரிய ஊழியர் நேற்று பரிதாபமாக இறந்தார்.
மேலும் தாளவாடி ஊராட்சியில் 15 பேரும், திங்களூர் ஊராட்சியில் 27 பேரும், பையனாபுரம் ஊராட்சியில் 4 பேரும், மல்லன்குழி ஊராட்சியில் 7 பேரும், இக்களூர் ஊராட்சியில் 4 பேரும், தலமலை ஊராட்சியில் 3 பேரும், திகனாரை ஊராட்சியில் 5 பேரும் என ஓரே நாளில் 65 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Next Story