புதிதாக 5,557 ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தீவிரம்
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 5 ஆயிரத்து 557 ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் 1,152 ரேஷன் கடைகள் மூலம், 8 லட்சத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமை, ஆயில் உள்ளிட்டவைகள் மாதந்தோறும் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதில் 7 லட்சத்து 24 ஆயிரத்து 155 அரிசி ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். மேலும் புதிதாக ரேஷன் கார்டு வேண்டி 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர். விண்ணப்பங்களின் அடிப்படையில் அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு தகுதியான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஸ்மார்ட் கார்டு தயாரிக்கும் பணிகள் எல்காட் நிறுவனத்தின் மூலம் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்து இருந்தவர்களில் முதல் கட்டமாக 5 ஆயிரத்து 557 ரேஷன் கார்டுகள் ஈரோடு மாவட்ட வழங்கல் துறைக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்தது. இதைத்தொடர்ந்து புதிதாக ரேஷன் கார்டு வந்துள்ள விண்ணப்பதாரர்களின் செல்போன் எண்ணுக்கு அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு வந்து புதிய கார்டினை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது.
இதையடுத்து கடந்த 2 நாட்களாக அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்தில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் ரேஷன் கார்டு கிடைக்காமல் விடுபட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கு 2-வது கட்டத்தில் விரைவில் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே புதிதாக வந்துள்ள அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கும் தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வழங்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். அதனால் புதிதாக ரேஷன் கார்டு வாங்கியவர்கள் நிவாரண நிதியை சம்மந்தப்பட்ட ரேஷன் கடையில் பெற்றுக்கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story