கடைகளில் பொருட்கள் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்
நாளை முதல் முழுஊரடங்கு அமலுக்கு வருவதையொட்டி கடைகளில் பொருட்கள் வாங்க நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர்.
பொள்ளாச்சி
நாளை முதல் முழுஊரடங்கு அமலுக்கு வருவதையொட்டி கடைகளில் பொருட்கள் வாங்க நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர்.
நாளை முதல் முழுஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டது.
இதற்கிடையில் பொதுமக்கள் ஊடரங்கு கட்டுப்பாடுகளை மீறி சாலைகளில் சுற்றி திரிந்தனர். இதனால் கொரோனா அதிகமானது.
இதையடுத்து நேற்று மாலை முதல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வரை 2 நாட்கள் கடைகள் இரவு 9 மணி வரை திறந்து இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்தது. மேலும் நாளை (திங்கட்கிழமை) முதல் தளர்வு இல்லாத முழுஊரடங்கு அமல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து சிறிய அளவிலான ஜவுளி, மளிகை கடைகள், இறைச்சி, காய்கறி கடைகள், பழக்கடைகள், சலூன் கடைகள் உள்ளிட்ட சில கடைகள் மட்டும் திறக்கப்பட்டன. பெரிய கடைகளில் ஊழியர்கள் இல்லாததால் திறப்பதில் சிரமம் ஏற்பட்டது.
கடைகளில் கூட்டம்
முழுஊரடங்கு அமலுக்கு வருவதையொட்டி கடைகளில் பொதுமக்கள் பொருட்கள் வாங்குவதற்கு திரண்டனர். இருப்பினும் சில கடைகளில் மட்டும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சில கடைகள் தவிர பெரும்பாலான கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றவில்லை. கூட்டம், கூட்டமாக நின்று பொருட்களை வாங்கி சென்றனர். இதனால் தொற்று மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
ஊரடங்கால் வெறிச்சோடி காணப்பட்ட சாலை, திடீர் அறிவிப்பு காரணமாக வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது.
இதேபோன்று ஆனைமலை, கோட்டூர் பகுதிகளில் உள்ள கடைகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
பொதுமக்கள் ஒத்துழைப்பு
கொரோனா முதல் அலையை விட, 2-வது அலையின் தாக்கம் அதிகமாக உள்ளது. முதல் அலையில் இறப்புகள் குறைவு. ஆனால் 2-வது அலையில் அதிகமாக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது.
தளர்வு இல்லாத ஊரடங்கு அமலுக்கு வருவதையொட்டி கடைகளுக்கு பொருட்கள் வாங்குவதற்கு செல்லும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றுங்கள், கிருமி நாசினி மருந்து கொண்டு அடிக்கடி கைகளை சுத்தப்படுத்தி கொள்ளுங்கள்.
பெரும்பாலும் வீட்டிற்கு அருகில் உள்ள கடைகளிலேயே ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும். கடைகளுக்கு செல்லும் போது குழந்தைகளை அழைத்து செல்ல கூடாது.
அதிகாரிகள், போலீசார் அபராதம் விதிப்பது, வழக்குபதிவு செய்வது என்று நடவடிக்கை எடுத்தாலும், சுய கட்டுப்பாடு இருந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது. அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story