குறுவை சாகுபடிக்கு தேவையான அளவு உரம்-விதைகள் இருப்பு; வேளாண் இணை இயக்குனர் தகவல்
குறுவை சாகுபடிக்கு தேவையான அளவு உரம்-விதைகள் இருப்பு உள்ளதாக வேளாண்மை இணை இயக்குனர் சின்னசாமி தெரிவித்து உள்ளார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சி.சின்னசாமி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் விவசாய பணிகள் மேற்கொள்ளும் அளவுக்கு தற்போது நீர் இருப்பு உள்ளது. இதனை பயன்படுத்தி நெல், மக்காச்சோளம், உளுந்து, கடலை பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகிறார்கள். குறுவை நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் முழுமையாக திருந்திய நெல் சாகுபடி முறையை கடைபிடித்து சாகுபடி செய்தால் 40 சதவீத அளவு தண்ணீரை சேமிக்கலாம். விளை பொருள் உற்பத்தியையும் 2 மடங்காக உயர்த்த முடியும்.
நெல் சாகுபடி செய்துள்ள வயல்களின் வரப்புகளில் பயறு வகை பயிர்களை விதைப்பு செய்தால் பூச்சி, நோய் தாக்குதல் குறைவாக இருக்கும். அதனால் கூடுதல் வருவாய் கிடைக்கும். வரப்பில் உள்ள சாறு உறிஞ்சும் பூச்சியை உண்பதற்காக வரும் பொறி வண்டு, ஊசி தட்டான் போன்ற நன்மை செய்யும் பூச்சிகள் அதிகமாக உற்பத்தியாகி நெல் பயிரை தாக்கக்கூடிய குருத்து பூச்சி, இலை சுருட்டு புழு போன்றவற்றை உண்பதால் நெல் பயிருக்கு பாதுகாப்பு கிடைக்கும். மேலும், பூச்சி மருந்து பயன்பாடு குறையும்.
அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில், 57 டன் சான்று பெற்ற நெல் விதைகள் இருப்பு உள்ளன. சிறுதானியங்கள், பயறு வகை விதைகள், நிலக்கடலை, உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. சாகுபடிக்கு தேவையான 5 ஆயிரத்து 120 டன் யூரியா, 1,260 டன் டி.ஏ.பி., 3 ஆயிரத்து 60 டன் பொட்டாஷ், 6 ஆயிரத்து 80 டன் காம்ப்ளக்ஸ் ஆகிய உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. உரங்கள் கூடுதல் விலைக்கு விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேபோல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் வேளாண்மை பணிகளுக்கு தடை கிடையாது. எனவே தனியார் விற்பனை நிலையங்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரை செயல்படும்.
வேளாண் பணிகளின் சந்தேகங்களுக்கு வட்டார வேளாண் உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ளலாம். அதன்படி ஈரோடு 94438 65485, சென்னிமலை 94438 65485, பெருந்துறை - 75024 02545, அம்மாபேட்டை 99429 26333, மொடக்குறிச்சி 97505 20838, கொடுமுடி 94885 76435, பவானி 97885 19522, அந்தியூர் 94435 46351, கோபி 94438 52710, டி.என்.பாளையம் 94892 18360, நம்பியூர் 94424 54678, சத்தியமங்கலம் 94438 38614, பவானிசாகர் 98653 06747, தாளவாடி 98422 09758 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story