ஆரணியில் விழாக்காலம் போன்று பஜாரில் திரண்ட பொதுமக்கள்
ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து நேற்று பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் விழாக்காலம் போன்று பஜாரில் திரண்டனர்.
ஆரணி
முழு ஊரடங்கு
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு இன்று (திங்கட்கிழமை) முதல் முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. பால் மற்றும் மருந்து கடைகளை தவிர மற்ற எந்த கடைகளும் திறப்பதற்கு அனுமதி கிடையாது.
இதனால் ஒரு வாரத்துக்கு தேவையான பொருட்களை பொதுமக்கள் வாங்கி கொள்வதற்காக ஏற்கனவே கட்டுப்பாடுகளுடன் இருந்த ஊரடங்கு நேற்று நீக்கப்பட்டு காலை முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளையும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
விழாக்காலம் போன்று
அதன்படி நேற்று ஆரணி நகரின் பிரதான சாலையான மார்க்கெட் ரோடு, காந்தி ரோடு, மண்டிவீதி, பெரியகடைவீதி, சைதாப்பேட்டை, அருணகிரி சத்திரம், வி.ஏ.கே.நகர், கொசப்பாளையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள மளிகை கடைகள், ஜவுளி கடைகள், பேக்கரிகள், இறைச்சி கடைகள் உள்பட அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன.
பொருட்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் திரண்டனர். விழாக்காலம் போன்று எங்குபார்த்தாலும் மக்கள் கூட்டமாக காட்சியளித்தது. பெரும்பாலானவர்கள் கொரோனா தொற்றின் விபரீதத்தை உணராமல் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் சுற்றித்திரிந்தனர்.
தொற்று பரவும் நிலை
இதனால் கொரோனா தொற்று பரவக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆரணியில் இருந்து சென்னை, திருவண்ணாமலை, வந்தவாசி, செய்யாறு ஆகிய நகரங்களுக்கு மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ்களில் குறைந்த அளவிலேயே பயணிகள் பயணித்தனர். ஒருசில தனியார் பஸ்கள் மட்டுமே இயங்கின.
சுகாதார துறையினர், காவல் துறையினர், வருவாய் துறையினர், ஆரணி நகராட்சி நிர்வாகம் இணைந்து காலை 10 மணிக்குப் பிறகு கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.
Related Tags :
Next Story