தூத்துக்குடி மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது
தூத்துக்குடி மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், நேற்று மார்க்கெட், கடைகளில் மக்கள் குவிந்து பொருட்களை வாங்கி சென்றனர்.
கொரோனா வைரஸ்
தமிழகத்தில் கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த 10-ம் தேதி முதல் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியது. இந்த ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது. 2 வார காலம் ஊரடங்கை அமல்படுத்திய போதிலும் கொரோனா தொற்றின் தாக்கம் குறையவில்லை.
இதனால் மேலும் ஒரு வாரத்துக்கு தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கை தமிழக அரசு அறிவித்து உள்ளது. மருந்து மற்றும் பால் கடைகளை தவிர அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடைகள், மார்க்கெட்டுகள் திறப்பு
இதையடுத்து பொதுமக்கள் ஒரு வாரத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொள்ளும் வகையில் நேற்று ஊரடங்கு முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டது. காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளையும் திறக்க அரசு அனுமதி அளித்தது. மேலும், பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பும் வகையில் பஸ்களும் நேற்று இயக்கப்பட்டன. இந்த தளர்வு காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து மார்க்கெட்டுகள், வணிக வளாகங்கள், கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் நேற்று வழக்கம் போல் திறக்கப்பட்டன. அதே போன்று பஸ்கள், ஆட்டோக்கள், வேன், கார்கள் அனைத்தும் வழக்கம் போல இயங்கின.
குவிந்தனர்
ஒரு வாரம் முழுமையான ஊரடங்கு அமலில் இருக்கும் என்பதால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க கடைகளில் குவிந்தனர்.
தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் மற்றும் தற்காலிக மார்க்கெட்டுகள், வ.உ.சி மார்க்கெட் போன்ற அனைத்து மார்க்கெட்டுகளிலும் காய்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்க மக்கள் குவிந்தனர். சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பற்றி கவலைப்படாமல் மக்கள் கூட்டம், கூட்டமாக குவிந்ததால் கொரோனா தொற்று மேலும் வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டது.
மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் போலீசார் ஒலி பெருக்கி மூலம் சமூக இடைவெளியை கடைபிடியுங்கள், முகக்கவசம் அணிந்து செல்லுங்கள் என தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துக் கொண்டே இருந்தனர். சமுக இடைவெளியை கடைபிடிக்காத கடைகளின் வியாபாரிகளுக்கு மாநகராட்சி பணியாளர்கள் அபராதம் விதித்தனர்.
பாதுகாப்பு
இதேபோன்று நகரில் உள்ள அனைத்து மளிகை, பலசரக்கு கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. காய்கறி மற்றும் மளிகை கடைகள் மட்டுமின்றி ஜவுளிக்கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகள், மின்சாதன விற்பனை கடைகள், பர்னிச்சர்கள், செல்போன் கடைகள், சலூன் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளிலுமே மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தூத்துக்குடி நகரின் அனைத்து முக்கிய சாலைகளிலும் நேற்று வாகன நெரிசல் காணப்பட்டது. குறிப்பாக பாளையங்கோட்டை சாலை, டபிள்யூ.ஜி.சி ரோடு, வி.இ.ரோடு, ஜெயராஜ் ரோடு போன்ற அனைத்து பிரதான சாலைகளிலும் வாகனங்கள் கூட்டம் கூட்டமாக அணிவகுத்து சென்றன.
மாவட்டம் முழுவதும் நேற்று ஊரடங்கில் முழுமையான தளர்வுகள் இருந்த போதிலும் போலீசார் வழக்கம் போல கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
Related Tags :
Next Story