கப்பல் மூழ்கி பெரும் உயிர் சேதம் ஓ.என்.ஜி.சி.யின் தீவிர அலட்சியமே காரணம் சிவசேனா குற்றச்சாட்டு
கப்பல் மூழ்கி பெரும் உயிர் சேதம் ஏற்பட்ட துயரத்துக்கு ஓ.என்.ஜி.சி.யின் தீவிர அலட்சியமே காரணம் என்று சிவசேனா குற்றம்சாட்டி உள்ளது.
மும்பை,
மும்பை கடல் பகுதியில் இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் (ஓ.என்.ஜி.சி.) எண்ணெய் கிணறு பராமரிப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்காக நிறுத்தப்பட்டு இருந்த பார்ஜ் வகை கப்பல் டவ்தே புயல் காரணமாக மூழ்கியது. இந்த கப்பல் தவிர மற்றொரு படகும் மூழ்கியது. இந்த விபத்துகளில் 86 பேர் மாயமானார்கள். அவர்களில் நேற்று வரை 66 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது.
இந்த பெருந் துயரத்துக்கு ஓ.என்.ஜி.சி.யின் அலட்சியமே காரணம் என்று மராட்டியத்தை ஆளும் சிவசேனா கட்சி குற்றம்சாட்டி உள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பத்திரிகையான சாம்னாவில் கூறியிருப்பதாவது:-
மும்பை கடல் பகுதியில் எண்ணெய் கிணறு பணியில் ஈடுபட்டது தனியார் நிறுவன ஊழியர்களாக இருக்கலாம். ஆனால் ஓ.என்.ஜி.சி.க்கு சொந்தமானது தான் அந்த எண்ணெய் கிணறு. அவர்கள் ஓ.என்.ஜி.சி.க்காக தான் பணி செய்தார்கள். எனவே அந்த ஊழியர்களை பாதுகாக்கும் பொறுப்பு ஓ.என்.ஜி.சி.க்கு உண்டு. ஏனெனில் புயல் தொடர்பான வானிலை எச்சரிக்கை முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு உள்ளது. விரைந்து செயல்பட்டு ஊழியர்களை பாதுகாத்து இருக்க வேண்டும். மாறாக தீவிர அலட்சியம் காட்டப்பட்டு உள்ளது. இது கடலில் நடந்த இயற்கை பேரிடர் அல்ல. மனிதர்கள் செய்த பேரிடர்.
இந்த அப்பாவிகளின் உயிரிழப்புக்கு மத்திய அரசின் நிறுவனமான ஓ.என்.ஜி.சி.யே பொறுப்பு. இந்த துயரத்துக்கு தார்மீக பொறுப்பு ஏற்று மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிராதான் பதவி விலகுவாரா?
இந்த பிரச்சினையில் ஓ.என்.ஜி.சி.யின் அணுகுமுறை வியப்பளிக்கிறது. எனவே கொலையல்லாத மரணத்தை ஏற்படுத்துதல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய கோருவதில் நியாயம் இருக்கிறது. வானிலை எச்சரிக்கையை முன்கூட்டியே தெரிவிக்காமல் அலட்சியம் காட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று எங்களது கட்சி வலியுறுத்துகிறது.
கடற்படையும், கடலோர காவல் படையும் விரைந்து செயல்பட தவறி இருந்தால் கடலில் தத்தளித்த 700 பேருமே மூழ்கி இருப்பார்கள். இவ்வாறு சிவசேனா கூறியுள்ளது.
Related Tags :
Next Story