கொரோனா தடுப்பூசி போட வந்திருப்பதாக கூறி மூதாட்டியை கட்டிப்போட்டு ரூ.4½ லட்சம் நகைகள் கொள்ளை பெண் பிடிபட்டார்
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டிபோட்டு ரூ.4.50 லட்சம் நகைகள் கொள்ளை அடித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பை ஒர்லியை சேர்ந்தவர் 74 வயது மூதாட்டியின் வீட்டில் கடந்த மாதம் 5-ந் தேதி கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. இதையடுத்து கதவை திறந்து மூதாட்டி பார்த்த போது வெளியே கொரோனா கவச உடை அணிந்த நிலையில் பெண் ஒருவர் நின்றிருந்தார். அவர் வயதானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட வந்திருப்பதாக தெரிவித்தார். இதற்கு மூதாட்டி மறுப்பு தெரிவித்தார்.
இதனால் அப்பெண் குடிக்க தண்ணீர் தருமாறு கேட்டார். இதனால் மூதாட்டி உள்ளே சென்ற போது அப்பெண் வீட்டிற்குள் நுழைந்து கதவை உள்புறமாக பூட்டிக்கொண்டார். பின்னர் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து மூதாட்டியின் கழுத்தில் வைத்து மிரட்டினார்.
பின்னர் வீட்டில் இருந்த 9 வயது பேரன் மற்றும் மூதாட்டியை கயிற்றால் கட்டி போட்டு வீட்டில் இருந்த ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்தார். பின்னர் அங்கிருந்து தப்பி சென்றார்.
இதனால் பாதிக்கப்பட்ட மூதாட்டி சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கவச உடை அணிந்து இருந்ததால் முகம் அடையாளம் காண முடியவில்லை. மேலும் கொள்ளை அடித்த பெண்ணின் கையில் பச்சை குத்தப்பட்டு இருந்ததாக சிறுவன் போலீசாரிடம் தெரிவித்தான்.
சம்பவம் நடந்து 10 நாட்கள் கழித்து அதே கட்டிடத்தின் சி விங் பகுதியில் வசித்து வந்த தீபாலி மாத்ரே என்ற பெண் கையில் பச்சை குத்தப்பட்டு இருந்ததை மூதாட்டி கண்டார். சந்தேகத்தின் பேரில் போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார் அங்கு சென்று அவரை பிடித்து நடத்திய விசாரணையில் மூதாட்டியை கட்டிப்போட்டு கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டார்.
வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டிகளை குறிவைத்து கொரோனா தடுப்பூசி போடுவதாக கூறி கொள்ளை அடித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story