குஜராத்தை போன்று புயல் பாதித்த மற்ற மாநிலங்களுக்கும் பிரதமர் மோடி உதவியிருக்க வேண்டும் துணை முதல்-மந்திரி அஜித்பவார் கூறுகிறார்
குஜராத்தை போன்று புயலால் பாதிக்கப்பட்ட மற்ற மாநிலங்களுக்கும் மத்திய அரசு உதவியிருக்க வேண்டும் என துணை முதல்-மந்திரி அஜித் பவார் கூறியுள்ளார்.
மும்பை,
அரபிக்கடலில் உருவான டவ்தே புயல் கடந்த திங்கட்கிழமை இரவு கரையை கடந்தது. குஜராத்தை இதனால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
இதேபோல மராட்டிய கடலோர பகுதிகளையும் கபளீகரம் செய்தது. இந்த நிலையில் குஜராத்தின் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி பார்வையிட்டார். மேலும் அவசர நிவாரணமாக குஜராத்திற்கு ரூ.1,000 கோடி நிதி உதவியை அளித்தார்.
இதுகுறித்து துணை முதல்-மந்திரி அஜித்பவார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
புயலால் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, கோவா, மராட்டியம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் பாதிக்கப்பட்டன. எனது கருத்துப்படி குஜராத்தின் இந்தியாவின் ஒரு பகுதி. அதேபோல மராட்டியமும் நாட்டின் ஒரு பகுதிதான்.
எனவே குஜராத்திற்கு ரூ.1,000 கோடி நிதி உதவி அளித்ததை போல் மற்ற மாநிலங்களுக்கும் உதவி அறிவிக்கப்பட்டு இருந்தால் அந்த மாநில மக்கள் நாட்டின் பிரதமர் தங்கள் மாநிலத்தின் மீதும் கவனம் செலுத்துவதாக உணர்ந்திருப்பார்கள்.
இந்த இழப்புகளை மதிப்பிடுவதற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் பொறுப்பு மந்திரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு வந்த நிசர்கா ஒப்பிடும்போது டவ்தேவின் தீவிரம் சற்று குறைவாக இருந்தது. ஆனால் இதுவும் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலைமையை ஆய்வு செய்தபிறகு எவ்வளவு நிவாரணம் வழங்கப்படும் என முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story