தேனியில் பொருட்கள் வாங்குவதற்கு திருவிழா கூட்டம் போல் கடைவீதிகளில் குவிந்த மக்கள் கடும் போக்குவரத்து நெரிசல்
தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால் தேனியில் பொருட்கள் வாங்குவதற்காக திருவிழா கூட்டம் போல் கடைவீதிகளில் மக்கள் குவிந்தனர்.
தேனி:
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த கடந்த 10-ந்தேதி முதல் சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை. இதையடுத்து இன்று (திங்கட்கிழமை) முதல் ஒரு வாரத்துக்கு தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
இதையடுத்து மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்வதற்காக நேற்று முன்தினம் மற்றும் நேற்று ஆகிய 2 நாட்களுக்கு அனைத்து கடைகளையும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. நேற்று முன்தினம் பிற்பகலில் இந்த அறிவிப்பு வந்தவுடன் கடைகள் திறக்கப்பட்டன.
அலைமோதிய கூட்டம்
இந்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், அனைத்து கடைகள் திறக்கப்பட்டதாலும் தேனியில் உள்ள கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. திருவிழா கூட்டம் போல் சாலைகளிலும், கடைவீதிகளிலும் மக்கள் படையெடுத்தனர். மளிகை கடைகள், முட்டை விற்பனை கடைகள், காய்கறி கடைகள் மட்டுமின்றி அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியதை காண முடிந்தது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொருட்கள் வாங்குவதற்கு கார், மோட்டார் சைக்கிள்களில் தேனிக்கு மக்கள் படையெடுத்தனர். இதனால், தேனி நகரின் பிரதான சாலைகளான கம்பம் சாலை, பெரியகுளம் சாலை, மதுரை சாலை ஆகிய சாலைகள் போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பித்தன. போலீசார் ஆங்காங்கே நின்று கொண்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். பல கடைகளில் சமூக இடைவெளியின்றி மக்கள் பொருட்களை வாங்கினர்.
தேனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று பொதுமக்கள் கொரோனா குறித்த விழிப்புணர்வு இல்லாமல் சமூக இடைவெளியின்றி பொருட்கள் வாங்கியதால் மேலும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story