மளிகை பொருட்களுடன் கொரோனாவையும் வாங்கிச்சென்ற பொதுமக்கள்
கடைவீதிகளில் கட்டுக்கடங்காமல் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளியை மறந்து மளிகை பொருட்களுடன் கொரோனாவையும் பொதுமக்கள் வாங்கிச்சென்றனர்.
திண்டுக்கல்:
தளர்வுகளற்ற ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் கடந்த 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை (இன்று) புதிய கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு அமலில் இருந்தது.
இந்த காலகட்டத்தில் காலை 6 மணி முதல் 10 மணி வரை காய்கறி, மளிகை கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டது.
டீக்கடைகள் உள்ளிட்ட பிற கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. ஓட்டல்களில் குறிப்பிட்ட நேர இடைவெளியில் பார்சல் முறையில் உணவு வழங்கப்பட்டது. அரசு, தனியார் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
மேலும் ஞாயிற்றுக்கிழமை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாமல் முழு ஊரடங்கு இன்று (திங்கட்கிழமை) முதல் ஒரு வாரத்துக்கு அமல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
மேலும் பொதுமக்களின் நலனுக்காக நேற்று முன்தினமும், நேற்றும் அனைத்து கடைகள், ஜவுளி, செல்போன் விற்பனை கடைகள், சலூன் கடைகள் என அனைத்துவிதமான கடைகளும் திறக்கப்பட்டன.
அலைமோதிய கூட்டம்
மேலும் முதல்-அமைச்சரின் இந்த அறிவிப்பு நேற்று முன்தினம் மதியம் 2.30 மணிக்கு மேல் அமலுக்கு வந்தது. இதனால் நேற்று முன்தினம் அனைத்து கடைகளும் திறந்திருந்தாலும் வாடிக்கையாளர்களின் வருகை குறைவாகவே இருந்தது.
ஆனால் நேற்று காலையில் இருந்தே மளிகை பொருட்கள், காய்கறிகள் வாங்குவதற்காக கடைவீதிகளில் கட்டுக்கடங்காமல் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இவர்களில் பலர் முக கவசம் அணியவில்லை. மேலும் சமூக இடைவெளியும் காற்றில் பறந்தது. பொதுமக்கள் மளிகை பொருட்களுடன் கொரோனாவையும் இலவசமாக வாங்கிச்சென்றனர்.
அதேபோல் இறைச்சி, மீன் கடைகள், ஜவுளிக்கடைகள், செல்போன் விற்பனை கடைகள், நகைக்கடைகள் ஆகியவற்றிலும் நேற்று பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இதன் காரணமாக பழனி சாலை, ரதவீதிகள் என நகரின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து சென்றன.
பழனி சாலையில் வாணிவிலாஸ் சிக்னல் அருகே கூட்ட நெரிசல் காரணமாக வாகனங்கள் ஒன்றோடு ஒன்று உரசின. அப்போது வாகன ஓட்டிகள் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது.
பயணிகள் கூட்டம்
அதேபோல் நேற்று ஒருநாள் மட்டுமே அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படும் என்பதால் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டமாக காட்சியளித்தது. பயணிகள் முக கவசம் அணிந்திருந்தாலும் தங்கள் ஊருக்கு சென்றுவிட வேண்டும் என்ற அவசரத்தில் பஸ்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் நெருக்கமாக நின்றபடி பயணம் செய்தனர்.
ஒரு சில பஸ்கள் பஸ் நிலையத்துக்கு வந்ததுமே பயணிகள் முண்டியடித்தபடி ஓடிச்சென்று பஸ்களில் இடம்பிடிக்கும் காட்சிகளையும் காண முடிந்தது.
திண்டுக்கல்லில் இருந்து வெளியூர்களுக்கு குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்பட்டதால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.
பழனியில் குவிந்த மக்கள்
பழனியில் நேற்று அதிகாலை முதலே மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர்.
அந்த வகையில் பழனி உழவர்சந்தையில் மக்கள் குவிந்ததால் நீண்ட வரிசையில் நிற்க வைக்கப்பட்டு காய்கறி வாங்கி சென்றனர்.
இதேபோல் காந்தி மார்க்கெட்டிலும் மக்கள் கூட்டம் குவிந்தது. ஒரு வாரத்துக்கு தேவையான பொருட்களை வாங்க மக்கள் குவிந்ததால் பல கடைகளில் காய்கறிகள் அதிக விலைக்கு விற்கப்பட்டது.
கடந்த சில நாட்கள் வரை கிலோ ரூ.8-க்கு விற்கப்பட்ட தக்காளி நேற்று காலையில் ரூ.30 விற்கப்பட்டது. பின்னர் மாலையில் அதன் விலை ரூ.20 ஆக குறைந்தது.
இதேபோல் அனைத்து காய்கறிகளும் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை அதிகம் விற்பனை செய்யப்பட்டது. எனினும் பொதுமக்கள் வேறு வழியின்றி அதை வாங்கி சென்றனர்.
Related Tags :
Next Story