கருப்பு பூஞ்சை நோயினால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? சுகாதாரத்துறை இயக்குனர் விளக்கம்
கருப்பு பூஞ்சை நோயின் அறிகுறிகள், பாதிப்புகள் குறித்து சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் மோகன்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரியில் கொரோனா வைரஸ் மக்களை பாடாய்படுத்தி வரும் நிலையில் மியூகோர்மைகோசிஸ் என்ற கருப்பு பூஞ்சை நோய் மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
யார் யார்? இந்த நோய் தொற்றினால் அதிகம் பாதிக்கப்படுவர்? நோய் எப்படி பரவுகிறது? அதை தடுக்கும் வழிமுறைகள் என்னென்ன? என்பது குறித்து ‘தினத்தந்தி’ நிருபரிடம் சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் மோகன்குமார் கூறியதாவது:-
கருப்பு பூஞ்சை தொற்று என்பது ஒருவித பூஞ்சை தான். இந்த தொற்றானது செடி கொடிகள், பழம், காய்கறிகள் அழுகும் போது அவற்றில் இருந்து உருவாகிறது. அப்போது உருவாகும் பூஞ்சையானது காற்றில் பறந்து கொண்டிருக்கும். அந்த பூஞ்சை மனிதர்கள் சுவாசிக்கும்போது மூக்கினுள் சென்று ஒட்டிக்கொள்ளும். அதன் பின்பு அது பெருகி தனது வேலையைக் காட்டத்தொடங்கிவிடும்.
கொரோனா நோய் தொற்றுக்கு ஸ்டீராய்டு உட்கொண்டவர்கள், சர்க்கரை நோயாளிகள், தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை பெற்றவர்கள், நீண்டகாலம் ஆக்சிஜன் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நோயாளிகள், மற்ற நோய்களுக்காக எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் மருந்துகளை உட்கொள்பவர்களை இது தாக்கும், கருப்பு பூஞ்சை நோய் தொற்று ஆபத்து உடையது. சரியான நேரத்தில் தக்க சிகிச்சை எடுக்காவிட்டால் இந்த கருப்பு பூஞ்சை மூக்கின் வழியாக மூளைக்கு பரவும் வாய்ப்பு உள்ளது. இந்த நோயினால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.
வீட்டிலேயே ஆக்சிஜன் உபயோகிப்பவர்கள் சுத்திகரிக்கப்பட்ட நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஸ்டீராய்டு மருந்துகளை அதிகமாக உட்கொள்வதையும், மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.
ஸ்டீராய்டு மருந்துகளை உட்கொண்டால் கண்டிப்பாக சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். எனவே சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டும்.
கருப்பு பூஞ்சை நோய்க்கு என்று தனியாக மருந்தும் உள்ளது. அந்த மருந்துகளை பயன்படுத்தும் போது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. கருப்பு பூஞ்சையானது கண்களின் வழியாக பரவும் போது கண் பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக கண்களில் இருந்து கண்ணீர் வடியும். கண்கள் மூடிக்கொள்ளும் போதும் துருத்திக்கொண்டு வெளியே தெரியும். அவ்வாறு கண்கள் பாதிக்கப்படும்போது கண் பார்வை இழப்பு ஏற்படும். கண்கள் வழியாக சென்று மூளையைத் தாக்கி வலிப்பு நோய் போன்றவற்றை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தை கூட விளைவிக்கும்.
இந்த கருப்பு பூஞ்சை தாக்குதலை சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மூலம் கண்டறியலாம். முன்பெல்லாம் வருடத்திற்கு ஒன்றிரண்டு நோயாளிகள் கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்படுவது அபூர்வமாக இருந்தது. ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாக இந்த நோயினால் மக்கள் எளிதாக பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
புதுவையை பொருத்தவரை தற்போது 20 பேர் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் ஒரு சிலர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர். அதாவது கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒருவரும், புதுவை அரசு ஆஸ்பத்திரியில் ஒருவரும் தொடர் சிகிச்சையில் உள்ளனர். ஜிப்மரில் சிலரும் சிகிச்சை பெற்றுள்ளனர். புதுவையில் கடந்த காலங்களில் இந்த கருப்பு பூஞ்சை நோயினால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
கொரோனாவை தடுக்க பயன்படுத்தும் வழிமுறைகளை கருப்பு பூஞ்சை நோய்க்கும் பயன்படுத்தலாம். குறிப்பாக முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தம் செய்வது ஆகியவற்றை கடைபிடிக்கவேண்டும். வெளியில் சென்றுவிட்டு வந்து கை கழுவாமல் முகம், மூக்கு உள்ளிட்டவற்றை தொடக்கூடாது. சூடான சத்தான உணவு வகைகளை நாம் சாப்பிட்டால் இந்த தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். இந்த நோய்க்கு தேவையான மருந்து மாத்திரைகளை அரசு சார்பில் கொள்முதல் செய்யவும் உள்ளோம்.
இவ்வாறு சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் கூறினார்.
Related Tags :
Next Story