நாகையில், பொருட்கள் வாங்க கடைவீதிகளுக்கு படையெடுத்த பொதுமக்கள்


நாகையில், பொருட்கள் வாங்க கடைவீதிகளுக்கு படையெடுத்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 23 May 2021 4:58 PM GMT (Updated: 23 May 2021 4:58 PM GMT)

இன்று முதல் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் நாகையில் நேற்று பொருட்கள் வாங்க கடைவீதிகளுக்கு பொதுமக்கள் படையெடுத்தனர். சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

நாகப்பட்டினம்:
இன்று முதல் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் நாகையில் நேற்று பொருட்கள் வாங்க கடைவீதிகளுக்கு பொதுமக்கள் படையெடுத்தனர். சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
கொரோனா 2-வது அலை
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நோய்த் தொற்றின் கோரப்பிடியில் சிக்கி பலியானோர் எண்ணிக்கையும் மளமளவென உயர்ந்து கொண்டே செல்கிறது. 
கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. ஊரடங்கின் போது அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் காய்கறி, மளிகை மட்டுமே காலை 10 மணி வரை திறந்திருந்தது. ஊரடங்கும் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என வருவாய்த்துறையினர், சுகாதாரத்துறையினர், போலீஸ் துறையினர் கண்காணித்து வருகின்றனர். விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
முழு ஊரடங்கு
பல்வேறு நடவடிக்கை எடுத்தும் கொரோனா தொற்று கட்டுக்குள் வரவில்லை. இதையடுத்து தமிழக அரசு இன்று (திங்கட்கிழமை) முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்தது. மேலும் நேற்று முன்தினமும், நேற்றும் அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை திறக்கலாம் எனவும் ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தி அரசு உத்தரவிட்டது. இதையடுத்து நாகை மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக அனைத்து கடைகளும் திறக்கப்பட்டிருந்தன. குறிப்பாக நாகை கடைத்தெரு, நீலா வீதிகள், புதிய, பழைய பஸ் நிலையங்கள், பப்ளிக் ஆபீஸ் ரோடு, நாகூர் உள்ளிட்ட நகர்ப்பகுதிகளில் அனைத்து கடைகளும் திறந்திருந்தன. 
படையெடுத்த பொதுமக்கள்
ஒருவாரம் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால் காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க அந்தந்த கடைகளுக்கு பொதுமக்கள் படையெடுத்தனர். மேலும் ஆடு, கோழி, மீன் இறைச்சிக் கடைகளில்  கூட்டம் அலைமோதியது. அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு எச்சரிக்கை செய்தனர். 
 நாகை கடை தெருவில் பொதுமக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்பட்டது.அப்போது பொதுமக்கள் சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு அத்தியாவசிய பொருட்களை வாங்குவதில் குறியாக இருந்ததால் கொரோனா தொற்று அபாயம் ஏற்பட்டது.
சலூன் கடைகள்
கடைத்தெருவில் எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே காணப்பட்டது. மேலும் பொருட்கள் வாங்குவதற்காக கிராமங்களில் இருந்து பஸ்களிலும், ஆட்டோக்களிலும் பொதுமக்கள் நாகை நகர் அப்பகுதியில் திரண்டனர். பேக்கரிகள், ஜவுளிக்கடைகள், செல்போன் சர்வீஸ் கடைகள், எலக்ட்ரிக்கல் கடைகள், ஹார்டுவேர் கடைகள், பேன்சி கடைகள் உள்ளிட்ட கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. இதுதவிர சலூன் கடைகளிலும் மூடிவெட்ட ஆண்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
பஸ்கள் இயக்கம்
நாகையில் இருந்து சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டன. பயணிகள் குறைவான அளவிலேயே பயணம் செய்தனர். இருப்பினும் பயணிகள் நலன் கருதி வெளியூர் மற்றும் உள்ளூர் பகுதிகளுக்கு பஸ்கள் தடையில்லாமல் இயக்கப்பட்டன. 
பஸ்களில் பயணம் செய்வோர் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பயணம் செய்ய கண்டக்டர்கள் அறிவுரை வழங்கினர். பயணிகளும் முககவசம் அணிந்தும்,, சமூக இடைவெளியை பின்பற்றியும் பயணம் செய்தனர். கார், ஆட்டோக்கள் ஓடியதால்  நாகை நகர் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
வேதாரண்யம்
 வேதாரண்யத்தில் பொருட்களை வாங்க நேற்று காலை முதல் இரவு வரை கடும் கூட்டம் காணப்பட்டது இதேபோல் கரியாப்பட்டினம், செம்போடை உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் மக்கள் ஒருவாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். வேதாரண்யத்தில் நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் ஆகியோர் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களை சமூக இடைவெளி விட்டும் முககவசம் அணிந்து அனைவரும் பொருட்களை வாங்க அறிவுறுத்தினர். நாகையை அடுத்த நாகூரில் பெரிய கடைத்தெரு, நியூ பஜார் சாலை. தேரடி தெரு ஆகிய பகுதிகளில் உள்ள காய்கறி, மளிகை கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. தர்கா மார்க்கெட்டில் உள்ள கறி, மீன். கோழி கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.இதேபோல திருமருகல், திட்டச்சேரி, கீழ்வேளூர், வாய்மேடு உள்பட நாகை மாவட்டத்தில் உள்ள கடைவீதிகளில் கூட்டம் அலை மோதியது.

Next Story