இன்று முதல் முழு ஊரடங்கு எதிரொலி அத்தியாவசிய பொருட்கள் வாங்க அலைமோதிய பொதுமக்கள் கூட்டம்


இன்று முதல் முழு ஊரடங்கு எதிரொலி அத்தியாவசிய பொருட்கள் வாங்க அலைமோதிய பொதுமக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 23 May 2021 10:43 PM IST (Updated: 23 May 2021 10:43 PM IST)
t-max-icont-min-icon

இன்று முதல் முழு ஊரடங்கு எதிரொலி அத்தியாவசிய பொருட்கள் வாங்க அலைமோதிய பொதுமக்கள் கூட்டம்

கள்ளக்குறிச்சி


முழு ஊரடங்கு 

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கடந்த ஏப்ரல் 20-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும் தொற்றின் வேகம் குறையாத காரணத்தால் கடந்த 10-ந் தேதி முதல் வருகிற 24-ந் தேதி வரை சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போது, மளிகை, காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் மதியம் 12 மணி வரை மட்டும் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டது.
பின்னர், ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்தப்பட்டு, கடந்த 15-ந் தேதி முதல் வருகிற 24-ந் தேதி வரை மளிகை, காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டது. 
இந்த நிலையில் தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் ஒரு வார காலத்துக்கு தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து, பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொள்ளும் வகையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும் அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. 

கடைகள்  திறக்கப்பட்டன

 இதன் அடிப்படையில்  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று காலை 6 மணிக்கு அனைத்து  கடைகளும் திறக்கப்பட்டன. டீக்கடைகள், பெட்டிக்கடைகள், துணிக்கடைகள், பாத்திரக்கடைகள், செல்போன் கடைகள், எலக்ட்ரிக்கல் கடைகள், எலக்ட்ரானிக்ஸ் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன.  அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவர்கள் கடைகளில் ஒருவரையொருவர் முண்டியடித்து கொண்டு பொருட்களை வாங்கி சென்றனர். 

 சங்கராபுரத்தில் உள்ள கடைவீதி, சந்தை பகுதி, கள்ளக்குறிச்சி சாலை, பூட்டை சாலை, திருக்கோயிலூர் சாலை பகுதிகளில் உள்ள மளிகை, காய்கறி உள்ளிட்ட அனைத்து கடைகளும் திறந்திருந்தன. இன்று(திங்கட்கிழமை) முதல் ஒரு வார காலத்துக்கு தளர்வு இல்லா முழு ஊரடங்கு என்பதால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி சென்றனர். இதனால் மளிகை, காய்கறி உள்ளிட்ட கடைகளில் காலை முதல் மாலை வரை பொதுமக்கள் கூட்டத்தை காண முடிந்தது.
அதேபோல் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர்,   தியாகதுருகம், உளுந்தூர்பேட்டை, சின்னசேலம், மூங்கில்துறைப்பட்டு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. அதேபோல் பஸ்களும் குறைந்த அளவில் இயக்கப்பட்டன. ஆனால் எதிர்பார்த்த அளவில் பயணிகள் கூட்டத்தை காண முடியவில்லை. சில பஸ்களில் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே பயணிகள் பயணம் செய்தனர். மேலும் ஆட்டோ, கார், வேன், லாரி, மினி லாரி உள்ளிட்ட வாகனங்களும் ஓடின. இதனால் சுமார் 2 வாரங்களாக வெறிச்சோடி கிடந்த வீதிகள், சாலைகள் பரபரப்புடன் காணப்பட்டது.

Next Story