அத்தியாவசிய பொருட்கள் வாங்க அலைமோதிய பொதுமக்கள் கூட்டம்


அத்தியாவசிய பொருட்கள் வாங்க அலைமோதிய பொதுமக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 23 May 2021 11:06 PM IST (Updated: 23 May 2021 11:06 PM IST)
t-max-icont-min-icon

இன்று முதல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

விழுப்புரம், 

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கடந்த ஏப்ரல் 20-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும் தொற்றின் வேகம் குறையாத காரணத்தால் கடந்த 10-ந் தேதி முதல் வருகிற 24-ந் தேதி வரை சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போது, மளிகை, காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் மதியம் 12 மணி வரை மட்டும் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டது.
பின்னர், ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்தப்பட்டு, கடந்த 15-ந் தேதி முதல் வருகிற 24-ந் தேதி வரை மளிகை, காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டது. 
இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் மதியம் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் குழுவினருடனும் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டங்களை தொடர்ந்து தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் ஒரு வார காலத்துக்கு தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அனைத்து கடைகளும் திறந்தன

இதையடுத்து, பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொள்ளும் வகையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும் அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.  இதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணிக்கு அனைத்து  கடைகளும் திறக்கப்பட்டன. 
டீக்கடைகள், பெட்டிக்கடைகள், துணிக்கடைகள், பாத்திரக்கடைகள், செல்போன் கடைகள், எலக்ட்ரிக்கல் கடைகள், எலக்ட்ரானிக்ஸ் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன.
 விழுப்புரம் நகரில் எம்.ஜி.சாலை, பாகர்ஷா வீதியில் உள்ள மார்க்கெட் பகுதிகள் மற்றும் நேருஜி சாலையில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவர்கள் கடைகளில் ஒருவரையொருவர் முண்டியடித்து கொண்டு பொருட்களை வாங்கி சென்றனர். இதனால் வழக்கத்தை விட நேற்று காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. இருப்பினும் வேறு வழியின்றி அதனை பொதுமக்கள் வாங்கி சென்றனர். 

சமூக இடைவெளி

 சமூக இடைவெளி, முக கவசம் அணிதல் உள்ளிட்ட அரசு வழிகாட்டு முறைகளை முறையாக கடைபிடிக்காமல் பொதுமக்கள் சுற்றிவந்தனர். இதனை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். அத்தியாவசிய பொருட்களை வாங்க வந்த பொதுமக்கள் தங்களது வாகனத்தை சாலையோரத்தில் நிறுத்தியதால் பாண்டி சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கொரோனா தொற்றை குறைப்பதற்காகத்தான் முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. 
ஆனால் அதை பற்றி  சிறிதும் உணராமல் பொறுப்பற்ற முறையில் மக்கள் ஒன்று திரண்டு கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கி சென்றனர். 

திண்டிவனம்

இதனால் தொற்று மேலும் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதேபோல் திண்டிவனம், செஞ்சி, மரக்காணம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் கடைகளில் குவிந்தனர். அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை அள்ளிச்சென்றதை காணமுடிந்தது. 

Next Story