லாரியில் கடத்திவரப்பட்ட ரூ.75 லட்சம் எரிசாராயம் பறிமுதல்
செஞ்சி அருகே லாரியில் கடத்திவரப்பட்ட ரூ.75 லட்சம் மதிப்புள்ள எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேல்மலையனூர்,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஞானோதயம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைசாவடியில் வளத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த லாரியை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த லாரியில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 573 கேன்களில் மொத்தம் 20 ஆயிரத்து 55 லிட்டர் எரிசாராயம் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், லாரி டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
பறிமுதல்
விசாரணையில் அவர், மராட்டிய மாநிலத்தை சேர்ந்த இக்ரம்(வயது 50) என்பதும், மராட்டிய மாநிலத்தில் இருந்து புதுச்சேரிக்கு எரிசாராயத்தை கடத்தி செல்ல முயன்றதும் தெரிந்தது. கடத்தி வரப்பட்ட எரிசாராயத்தின் மொத்த மதிப்பு ரூ.75 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இதையடுத்து டிரைவர் இக்ரமை போலீசார் கைது செய்தனர். மேலும் எரிசாராயம் மற்றும் எரிசாராயத்தை கடத்த பயன்படுத்த லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது பற்றி அறிந்த விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story