அரசின் பாதுகாப்பு விதிமுறைகளை பொதுமக்கள் மதிக்க வேண்டும்


அரசின் பாதுகாப்பு விதிமுறைகளை பொதுமக்கள் மதிக்க வேண்டும்
x
தினத்தந்தி 23 May 2021 11:21 PM IST (Updated: 23 May 2021 11:21 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த அரசின் பாதுகாப்பு விதிமுறைகளை பொதுமக்கள் மதிக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் அறிவுரை கூறினார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மகாராஜபுரம் பகுதியில்  போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது வாகன ஓட்டிகள் முக கவசம் அணிந்து வருகிறார்களா என்று சோதனை மேற்கொண்டனர். இந்த பணியை  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை பரவலை முற்றிலும் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசின் ஊரடங்கு விதிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கும் விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

சட்டப்படி நடவடிக்கை

 ஊரடங்கு விதிகளை மீறி செயல்படுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். 
விழுப்புரம், திண்டிவனம் ஆகிய நகராட்சி பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் 2 நகராட்சி பகுதிகளில் இருந்தும் 10 கி.மீ. தவிர்த்து கிராமப்புற பகுதிகளில் இருந்து மக்கள் நகர்ப்புற பகுதிகளுக்குள் வராமல் இருக்கும் வகையில் விழுப்புரம், திண்டிவனம் நகர எல்லைப்பகுதிகளை சுற்றி தடுப்புகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்களின் ஒத்துழைப்பு

மேலும் மாவட்டத்தில் ஏற்கனவே உள்ள 9 சோதனைச்சாவடிகளை தவிர 6 இடங்களில் தற்காலிகமாக சோதனைச்சாவடிகள் அமைத்தும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். இ-பதிவு அனுமதி பெற்று வருபவர்கள் மட்டுமே மாவட்டத்திற்குள் வருவதற்கு அனுமதிக்கப்படுகிறது. இ-பதிவு இல்லாமல் வருவோர் மாவட்ட எல்லைக்குள் உள்ளே நுழையாதவாறு அவர்கள் அப்படியே திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் அனைவரும் அரசு வகுத்துள்ள பாதுகாப்பு விதிமுறைகளை மதித்து நடக்க வேண்டும். பொதுமக்களின் ஒத்துழைப்பு மூலமாகத்தான் கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story