திருப்பத்தூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்றுமுதல் தடுப்பூசி. கலெக்டர் தகவல்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்றுமுதல் தடுப்பூசி
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கொரோனாவை விரட்டும் ஆயுதங்களாக முககவசம், சமூக இடைவெளி, கை கழுவுதல் போன்ற முறைகள் மக்களுக்கு பரிந்துரைக்கப்பட்டு வருகின்றன. இவைகளைத் தாண்டி கொரோனாவிற்கு எதிரான போர் ஆயுதமாக தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஏற்கனவே 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை 45 வயதிற்கு மேற்பட்ட 59,473 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தற்போது தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி இன்று (திங்கட்கிழமை) முதல் 18 வயது முதல் 44 வயது வரையிலான அனைத்து கட்டிட தொழிலாளர்கள், சில்லரை விற்பனை கடை வியாபாரிகள், அனைத்து போக்குவரத்து ஊழியர்கள், அரசு ஊழியர்கள், அனைத்து பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்கள், செய்தித்தாள், பால் வினியோகம் செய்பவர்கள், சாலையோர வியாபாரிகள், மளிகை கடைக்காரர்கள், மருந்து விற்பனையாளர்கள், மின்வாரிய தொழிலாளர்கள், பத்திரிகையாளர்கள் போன்றவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை, சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மேற்குறிப்பிடப்பட்டவர்கள் தாங்களாகவே முன்வந்து இந்த சிறந்த வாய்ப்பினை பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story