குளித்தலை அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி புதுமாப்பிள்ளை-தந்தை பலி


குளித்தலை அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி புதுமாப்பிள்ளை-தந்தை பலி
x
தினத்தந்தி 23 May 2021 11:41 PM IST (Updated: 23 May 2021 11:41 PM IST)
t-max-icont-min-icon

குளித்தலை அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் புதுமாப்பிள்ளை மற்றும் அவரது தந்தை பரிதாபமாக இறந்தனர்.

குளித்தலை
கார்கள் மீது அடுத்தடுத்து மோதல்
திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் குமரவேல் (வயது 50). இவரது மனைவி பாக்கியம் (48), மகன் பிரசாந்த் (29), மருமகள் நிர்மலா (21). இதில் பிரசாந்த்-நிர்மலாவிற்கு கடந்த 17-ந்தேதி திருமணம் நடைபெற்றது. ஊரடங்கு காரணமாக போக்குவரத்து இல்லாததால் அவர்கள் அனைவரும் கோவையில் இருந்துள்ளனர்.
 தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதால் நேற்று காலை கோவையில் இருந்து கரூர் மாவட்டம், குளித்தலை வழியாக திருச்சிக்கு ஒரு காரில் குமரவேல் உள்பட 4 பேரும் வந்து கொண்டிருந்தனர். அந்த கார் நேற்று மதியம் குளித்தலை அருகே உள்ள மணத்தட்டை பகுதியில் வந்து கொண்டிருந்தது. 
அப்போது அதே சாலையில் எதிரே வந்த மற்றொரு கார் குமரவேல் உள்பட 4 பேர் வந்த காரின் மீதும், அதன் பின்னால் வந்த மற்றொரு காரின் மீதும் நேருக்கு நேர் மோதியது. 
தந்தை-மகன் பலி
 இதில் காரின் இடிபாடுகளில் சிக்கி குமரவேல், பாக்கியம், பிரசாந்த், நிர்மலா ஆகிய 4 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமரவேல், பிரசாந்த் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். 
போலீசார் விசாரணை
பாக்கியம், நிர்மலா ஆகியோருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 6-வது நாளில் புதுமாப்பிள்ளை விபத்தில் இறந்த சம்பவம் இருகுடும்பத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Related Tags :
Next Story