தென்னையில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த விளக்கு பொறிகள், மைதா மாவு பசையை பயன்படுத்தலாம்; வேளாண்மை அதிகாரி ஆலோசனை


தென்னையில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த விளக்கு பொறிகள், மைதா மாவு பசையை பயன்படுத்தலாம்; வேளாண்மை அதிகாரி ஆலோசனை
x
தினத்தந்தி 24 May 2021 12:02 AM IST (Updated: 24 May 2021 12:02 AM IST)
t-max-icont-min-icon

தென்னையில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த விளக்கு பொறிகள் அல்லது மைதா மாவு பசையை பயன்படுத்தலாம் என வேளாண்மை அதிகாரி தெரிவித்துள்ளார்.

பரமத்திவேலூர்:
வெள்ளை ஈ தாக்குதல்
பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பரமத்தி வட்டாரத்தில் அதிகளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்சமயம் தென்னையில் பூச்சிகள், நோய் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. இதில் ரூகோஸ் எனப்படும் வெள்ளை ஈக்களின் தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. இதனால் தென்னையில் மகசூல் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. 
வெள்ளை ஈக்கள் தென்னையை தாக்கி, சாறு உறிஞ்சும் பூச்சியாகும். தென்னை ஓலைகளின் கீழ் பரப்பில் சுருள், சுருளாக இந்த ஈக்களின் முட்டைகள் காணப்படும். இந்த முட்டைகள் அடந்த வெண்ணிற மெழுகு போன்ற துகள்களால் மூடப்பட்டிருக்கும். இதிலிருந்து சுரக்கும் ஒரு வகை இனிப்பு திரவத்தினால், கரும்பூஞ்சைகள் உற்பத்தியாகி ஓலை பரப்பு முழுவதையும் கருப்பு நிறமாக மாற்றுகிறது. இதனால் ஒளிச்சேர்க்கை பாதிக்கப்பட்டு தென்னையில் காய்ப்புத்திறன் குறைகிறது.
நன்மை செய்யும் பூச்சிகள்
வெள்ளை ஈக்களின் நடமாட்டம் மாலை 6 மணிக்கு மேல் இரவு 8 மணிக்குள் அதிகளவில் காணப்படுகிறது. எனவே இதனை கட்டுப்படுத்த இரவில் விளக்கு பொறிகளை ஏக்கருக்கு 2 என்ற அளவில் பொருத்தி, ஈக்களை கவர்ந்து அழிக்கலாம். ஈக்களின் தாக்குதல் அதிகரிக்கும் போது வேப்பங்கொட்டை கரைசல், வேப்ப இலை கரைசல், வேப்ப எண்ணெய் கரைசல், மீன் எண்ணெய் ரெசின் சோப்பு கரைசல் ஆகியவற்றை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம். 
மேலும், நன்மை செய்யும் பூச்சியான பச்சை கண்ணாடி இறக்கை பூச்சிகளை உயிரியல் ஆய்வகத்தில் இருந்து பெற்று ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் வீதம் பயன்படுத்தலாம். ஈக்களால் உருவாகும் கரும்பூஞ்சையை அகற்ற ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் என்ற அளவில் மைதா மாவு பசையை கலந்து, தென்னை ஓலைகள் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும். 
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story