ஊரடங்கால் விசைத்தறிகள் மூடல்; குருசாமிபாளையத்தில் ரூ.1 கோடி ஜவுளிகள் தேக்கம்; நிவாரணம் வழங்க விசைத்தறியாளர்கள் கோரிக்கை
ஊரடங்கு காரணமாக விசைத்தறிகள் மூடப்பட்டுள்ளதால் குருசாமிபாளையத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள ஜவுளிகள் தேக்கம் அடைந்துள்ளன. எனவே நிவாரணம் வழங்க வேண்டும் என்று விசைத்தறியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராசிபுரம்:
ஊரடங்கால் விசைத்தறிகள் மூடல்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள குருசாமிபாளையத்தில் ஆயிரக்கணக்கான நெசவாளர் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்கு விசைத்தறி தொழில் பிரதானமாக இருந்து வருகிறது. இந்த தொழிலில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது கொரோனா 2-வது அலை காரணமாக விசைத்தறி கூடங்கள் இயக்கப்படாமல் மூடப்பட்டுள்ளன. இதனால் விசைத்தறியாளர்கள், தொழிலாளர்கள் வருமானம் இன்றி தவிக்கின்றனர். மேலும் ஏற்கனவே விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளிகளை வெளி மாவட்டம், வெளி மாநிலங்களுக்கு அனுப்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், ரூ.1 கோடி மதிப்பிலான ஜவுளிகள் விசைத்தறிகளில் தேக்கம் அடைந்துள்ளன.
வருமானம் இன்றி தவிப்பு
இதுகுறித்து குருசாமிபாளையம் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:-
குருசாமிபாளையத்தில் பிரதான தொழிலாக விசைத்தறியில் இருந்து ஜவுளி ரகங்கள் உற்பத்தி செய்யும் தொழில் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட ரேப்பியர் தறிகளும், 1,200-க்கும் மேற்பட்ட சாதா பாக்ஸ் தறிகளும் இயங்கி வருகின்றன. விசைத்தறி தொழிலில் பாவு சுற்றுபவர்கள், வைண்டிங் நிரப்புகிறவர்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கொரோனா தொற்று காரணமாக தற்போது விசைத்தறிகள் இயங்கவில்லை. இதனால் விசைத்தறியாளர்கள் அதை நம்பியுள்ள தொழிலாளர்கள் வருமானம் இன்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே விசைத்தறியாளர்கள், மற்றும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரூ.1 கோடி ஜவுளிகள் தேக்கம்
துண்டு உற்பத்தியாளர் தேவராஜன் கூறியதாவது:-
குருசாமிபாளையத்தில் ஆயிரக்கணக்கான விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இங்கு போர்வை, துண்டு ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் போர்வை ரகங்கள் கரூருக்கும், துண்டு ரகங்கள் ஈரோடு மார்க்கெட்டுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும் தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களுக்கும் தொழிலாளர்கள் சென்று அங்கு தலைச்சுமையாக ஜவுளிகளை விற்பனை செய்து வருகின்றனர்.
தற்போது ஊரடங்கால் போக்குவரத்து முடக்கம் ஏற்பட்டுள்ளதால் வெளியிடங்களுக்கு சென்று ஜவுளிகளை விற்பனை செய்ய முடியவில்லை. இதனால் விசைத்தறிகளை இயக்காமல் உள்ளோம். மேலும் ஏற்கனவே உற்பத்தி செய்த துணிகளை விற்பனை செய்ய முடியாததால், ரூ.1 கோடி மதிப்பிலான ஜவுளிகள் தேக்கம் அடைந்துள்ளன.
நிவாரணம் வழங்க வேண்டும்
இதனால் புதிய ஜவுளிகளை உற்பத்தி செய்ய முடியாமலும், தேங்கியுள்ள ஜவுளிகளை விற்பனை செய்ய முடியாமலும் தவித்து வருகிறோம். எனவே விசைத்தறியாளர்கள் வங்கிகளில் பெற்ற கடனை திரும்ப செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்.
மேலும், விசைத்தறி நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு கொரோனா காலம் முடியும் வரை உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story