வங்கக்கடலில் புயல் எதிரொலி கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கடலூர் முதுநகர்,
அந்தமான் அருகே வங்கக்கடலில் கடந்த 22-ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது நேற்று மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி அந்தமானுக்கு வடக்கு, வடமேற்கு திசையில் 560 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இது இன்று (திங்கட்கிழமை) புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும், நாளை (செவ்வாய்க்கிழமை) தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது புயலாக மாறும் பட்சத்தில் இதற்கு யாஸ் புயல் என்று பெயரிடப்படும் எனவும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த புயல் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கக்கடலில் தீவிர காற்றழுத்த பகுதி உருவான எதிரொலியாக கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று மாலை ஏற்றப்பட்டுள்ளது.
அதாவது வங்க கடலில் தூரத்தில் புயல் உருவாகி இருப்பதை ஒன்றாம் எண் குறிப்பதாகும். இதற்கிடையே புயல் எச்சரிக்கை காரணமாக, பரங்கிப்பேட்டை கடலோர மீனவ கிராமங்களான அண்ணன்கோவில், கூழையாறு, சூர்யா நகர், முடசல் ஓடை எம்.ஜி.ஆர். திட்டு, முழுக்குத்துறை, சின்னவாய்க்கால் உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் இருந்து சிறிய ரக படகில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் யாரும் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இதனால்படகுகள் அனைத்தும் அன்னங்கோவில் மீன்பிடி தளத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
Related Tags :
Next Story