கர்நாடகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க செயல் திட்டம் - மந்திரி சுதாகர் தகவல்
கர்நாடகத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்க செயல் திட்டம் வகுக்கப்படும் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.
பெங்களூரு:
சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கொரோனா ஆய்வகங்கள்
கர்நாடகத்தில் இதுவரை 2.85 கோடி கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 2.38 கோடி பரிசோதனைகள் ஆர்.டி.பி.சி.ஆர். வகையை சேர்ந்தது. மொத்த பரிசோதனையில் 70 சதவீதம் ஆர்.டி.பி.சி.ஆர். வகையை சார்ந்தவையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
கர்நாடகத்தில் தற்போது 241 கொரோனா ஆய்வகங்கள் செயலாற்றி வருகின்றன. இதில் அரசின் ஆய்வகங்கள் 91, தனியார் ஆய்வகங்கள் 150 ஆகும். கொரோனா பரிசோதனைக்கான சளி மாதிரி சேகரிக்கும் பணி அதிக இடங்களில் மேற்கொள்ளப்படுகிறது. கர்நாடகத்தில் கடந்த ஓராண்டில் 22 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஆக்சிஜன் உற்பத்தி
1,248 எச்.எப்.என்.சி. வசதி உடைய படுக்கைகள், 701 ஐ.சி.யு. படுக்கைகள், 1,548 வென்டிலேட்டர்களுடன் கூடிய படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வசதிகள் தற்போது தாலுகா ஆஸ்பத்திரிகளிலும் தொடங்கப்பட்டுள்ளன. கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் வினியோகம் சரியான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கர்நாடகத்தில் 815 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. மத்திய அரசு கர்நாடகத்திற்கு 1,015 டன் ஆக்சிஜனை ஒதுக்கியுள்ளது. கோலார், யாதகிரி மாவட்ட ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆலைகள் இயங்க தொடங்கியுள்ளன. அதில் இருந்து தினசரி 140 டன் ஆக்சிஜன் கிடைக்கிறது.
சிலிண்டர்கள்
இது போன்று மேலும் 4 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் அமைக்க திட்டமிட்டுள்ளோம். கொப்பல், கலபுரகி, பெங்களூரு ஆகிய நகரங்களில் புதிய ஆக்சிஜன் உற்பத்தி அலைகள் அமைக்கப்படுகின்றன. இதற்கு இந்திய ராணுவ ஆராய்ச்சி மையம் உதவி செய்கிறது. மத்திய அரசு இதுவரை 800 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 380 ஆக்சிஜன் சிலிண்டர்களை கர்நாடகத்திற்கு வழங்கியுள்ளது.
மத்திய அரசு மேலும் 1,600 ஆக்சிஜன் சிலிண்டர்களை ஒதுக்கியுள்ளது. அது விரைவில் கர்நாடகத்திற்கு வரும். மைசூரு, சிக்பள்ளாப்பூர், கோலார், ராமநகர், கார்வார் மாவட்டங்களில் ஆக்சிஜன் சேமிப்பு கிடங்கு அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசு கர்நாடகத்திற்கு இதுவரை 1,000 டன் ஆக்சிஜனை ரெயில் மூலம் வழங்கியுள்ளது.
தடுப்பூசி கொள்முதல்
கர்நாடகத்தில் வருகிற நவம்பர் மாதத்திற்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்க ஒரு முழுமையான செயல் திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. கர்நாடகத்தில் இதுவரை 1 கோடியே 20 லட்சத்து 14 ஆயிரத்து 15 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கர்நாடகம் நேரடியாக தடுப்பூசி கொள்முதல் செய்ய ஆர்டர் வழங்கியுள்ளது. இதில் இதுவரை 14 லட்சத்து 94 ஆயிரத்து 170 டோஸ் தடுப்பூசி கிடைத்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்திலும் மருத்துவ கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது கொரோனாவுக்கு எதிராக போராட உதவும்.
இவ்வாறு சுதாகர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story