மதுரையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை
மதுரையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்
மதுரை
மதுரையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.
ஆலோசனை கூட்டம்
மதுரை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஒத்தக்கடை ஆர்.கே.திருமண மண்டபத்தில் நடந்தது. கலெக்டர் அனிஷ் சேகர் வரவேற்றார். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலை வகித்தார். அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற 15 நாட்களுக்குள் வெளிப்படைத் தன்மையுடன் இரவு-பகல் பாராமல் கொரோனா தடுப்பு பணிகளுக்கான பல்வேறு நடவடிக்கையை மேற் கொண்டு வருகிறார். ஆரம்பத்தில் ஆக்சிஜன் மற்றும் பற்றாக்குறை இருந்தது. ஆனால் தற்போது வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து மருந்துகளும், ஆக்சிஜனும் வந்து கொண்டு இருக்கிறது. மதுரையில் தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. எனவே தட்டுப்பாடு என்பது இல்லை. கொரோனா குறித்து கிராமப்புறங்களிலும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பள்ளிக்கூடங்கள்
சுகாதார துறையினருடன் இணைந்து அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவிகுழுக்கள் கிராமத்தில் உள்ள ஒவ்வொறு வீடுவீடாக சென்று பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளவேண்டும். அதில் கொரோனா அறிகுறி தெரிந்தால் அவர்களை தனிமைப்படுத்தி மற்றவர்களுக்கு கொரோனா பரவுவதை தடுக்க வேண்டும். போதுமான அளவு இடவசதி மற்றும் தனி கழிப்பறை, குளியலறை வசதி இருப்பின் அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்த வேண்டும். மேற்கண்ட வசதிகள் இல்லாதவர்களுக்கு ஊராட்சி சார்பில் பள்ளிக் கூடங்கள் அல்லது திருமணமண்டபங்கள் போன்றவற்றில் தற்காலிகமாக தனிமைப்படுத்துவதற்கு போதுமான அடிப்படை வசதிகளுடன் ஏற்படுத்த வேண்டும். அதுபோன்ற நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு ஊராட்சி அளவில் ஒருபொறுப்பு அலுவலர் மற்றும் ஒன்றிய அளவில் ஒருபொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பூமிநாதன், வெங்கடேசன், மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா கலாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story