விழுப்புரத்தில் பெய்த கனமழை; 50 ஏக்கர் வாழை மரங்கள் சேதம்
விழுப்புரத்தில் பெய்த கனமழையால் 50 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமாகி உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் விவசாயம் நிறைந்த மாவட்டமாகும். இங்குள்ள கிராமப்புற பகுதிகளில் நெல், கரும்பு, உளுந்து, மணிலா, கம்பு, சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர் வகைகளும், பல்வேறு தோட்டக்கலை பயிர்களான காய்கறிகள், வாழை மற்றும் பழ வகைகளும் பயிர் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மாலை மற்றும் இரவு வேளையில் பலத்த காற்று மற்றும் இடி-மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.
அதன்படி நேற்று முன்தினம் மாலையும் பலத்த மழை பெய்தது. இரவிலும் இந்த மழை நீடித்தது.
விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக கோலியனூர், வளவனூர், சகாதேவன்பேட்டை, ராமையன்பாளையம், சுந்தரிபாளையம், நல்லரசன்பேட்டை, சிறுவந்தாடு, பஞ்சமாதேவி, பூவரசங்குப்பம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 50 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முறிந்து சேதமாகியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வாழை மரத்தில் இருந்த குலைகள் நன்கு விளைந்து வந்த நிலையில், மரங்கள் முறிந்து விழுந்துள்ளது. இதனால் அந்த குலைகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
சேதமதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. எனவே மழையினால் சேதமடைந்த வாழை மரங்களை அதிகாரிகள் பார்வையிட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகையை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story