கடலூர் மாவட்டத்தில் 563 வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்
கடலூர் மாவட்டத்தில் 563 வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்படவுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.
கடலூர்,
ஆய்வுக்கூட்டம்
கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கு காலங்களில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சி.வி.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினர். பின்னர் இது பற்றி அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
563 வாகனங்கள்
ஊரடங்கு காலத்தில் கடலூர் மாவட்ட மக்களுக்கு 563 வாகனங்கள் மூலம் காய்கறிகள் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்துள்ளோம். தமிழகம் முழுவதும் தோட்டக்கலை துறை, வேளாண்மை துறை, வேளாண் விற்பனை துறை சார்பில் 5,822 நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்ய இருக்கிறோம். சில்லரை விற்பனையாகவும், ரூ.100, ரூ.200 தொகுப்பாகவும் காய்கறிகளை விற்பனை செய்ய இருக்கிறோம்.
இது தவிர கூட்டுறவு துறையினர் மூலமாகவும் மளிகை பொருட்கள், காய்கறிகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குழு கண்காணிக்கும்
கடலூர் மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்த முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவை ஒழிப்போம். ரேஷன் கடைகள் மூலம் கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிவாரணம் அனைவருக்கும் கிடைத்துள்ளதா என்பதை மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு கண்காணிக்கும். இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஶ்ரீஅபிநவ், மாவட்ட வருவாய் அலுவலர் அருண் சத்யா, திட்ட இயக்குனர் மகேந்திரன், கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், நலப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ் பாபு, சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பணி நியமன ஆணை
முன்னதாக 66 அம்மா மினி கிளினிக்குகளில் பணியாற்றுவதற்காக பல்நோக்கு பணியாளர்கள் 66 பேருக்கு தற்காலிக பணி நியமன ஆணைகளை அமைச்சர்கள் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம், சி.வி..கணேசன் ஆகியோர் வழங்கினர்.
Related Tags :
Next Story