திசையன்விளை அருகே வாலிபரை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; உதவி போலீஸ் சூப்பிரண்டிடம் கிராம மக்கள் மனு
திசையன்விளை அருகே வாலிபரை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள், வள்ளியூர் உதவி போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்தனர்.
வள்ளியூர், மே:
திசையன்விளை அருகே ஊரடங்கு உத்தரவை மீறியதாக வாலிபர் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்.சி.நந்தன்குளம் கிராம மக்கள், வள்ளியூர் உதவி போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்தனர்.
வாலிபர் மீது தாக்குதல்
நெல்லை மாவட்டம் திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 2 போலீசார் கடந்த 21-ந் தேதி இரவில் திசையன்விளை அருகே உள்ள ஆர்.சி. நந்தன்குளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் சில வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அப்போது போலீசார் அவர்களை பிடித்து எச்சரித்து உள்ளனர். இதனால் போலீசாருக்கும், வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவாகி உள்ளதாக தெரிகிறது. இதில் கிங்ஸ்லின் என்ற வாலிபரை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை வீடியோ எடுத்த இளைஞர்களிடம் இருந்து போலீசார் 4 செல்போன்களை பறித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் காயமடைந்த வாலிபர் கிங்ஸ்லினுக்கு, ராதாபுரம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
வள்ளியூர் இன்ஸ்பெக்டர் விசாரணை
இந்நிலையில் திசையன்விளை போலீஸ் நிலையத்தில் போலீசார் அளித்த புகாரின் பேரில் அரசு பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியதாக கிங்ஸ்லின் மற்றும் அவருடைய தம்பி பிரபாகரன் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் போலீசார் தாக்கியதாக கூறப்படும் கிங்ஸ்லின் அளித்த புகாரின் பேரில் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை என தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் மேல் விசாரணைக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் வள்ளியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ், ஆர்.சி நந்தன்குளம் கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அங்கு போலீசாரால் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட கிங்ஸ்லின் மற்றும் அவரது நண்பர்களுடன் செல்போன் பேசிக்கொண்டு இருந்த இடம், புனித ராயப்பர் கோவில் அருகிலுள்ள வளாகம், சுற்றுச்சுவர், மைதானம் ஆகிய இடங்களை ஆய்வு செய்தார்.
உதவி சூப்பிரண்டிடம் மனு
அப்போது கிங்ஸ்லின் உறவினர்கள் மற்றும் சம்பவத்தை பார்த்த பொதுமக்களிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஆர்.சி நந்தகுளம் கிராம மக்கள் சுமார் 30 பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் நேற்று 2 வேன்களில் வள்ளியூரில் உள்ள உதவி போலீஸ் சூப்பிரண்டு சமய்சிங் மீனாவை நேரில் சந்தித்தனர்.
கிங்ஸ்லின் உள்பட 7 பேர் மீது போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டும். கிங்ஸ்லினை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மனு அளித்தனர்.
மேலும் இதுதொடர்பாக அவர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடமும் மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story