பாலக்கோடு மார்க்கெட்டில் தக்காளி விலை அதிகரிப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி
பாலக்கோடு மார்க்கெட்டில் தக்காளி விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
பாலக்கோடு,
பாலக்கோட்டில் உள்ள தக்காளி மார்க்கெட்டிற்கு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விளையும் தக்காளிகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். திருச்சி, கரூர், நாமக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மொத்த வியபாரிகள் மார்க்கெட்டிற்கு வந்து தக்காளிகளை கூடை கூடையாக வாங்கி செல்வார்கள்.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு மற்றும் தொற்று பரவல் அச்சத்தால், வெளி மாவட்ட வியாபாரிகள் தக்காளி மார்க்கெட்டிற்கு வராததாலும், காய்கறி கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே இயங்கியதால் தக்காளி விலை குறைந்தது. இதனால் உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் தக்காளிகளை அறுவடை செய்யாமல் தோட்டங்களிலேயே விட்டு விட்டனர்.
இதற்கிடையே இன்று (திங்கட்கிழமை) முதல் ஒரு வாரம் முழு ஊரடங்கு அமல்படு்த்தப்பட்டுள்ளது. இதையொட்டி நேற்று மற்றும் நேற்று முன்தினம் மாலை முதல் ஊரடங்கு தளர்வு என தமிழக அரசு அறிவித்ததால் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் மாலை முதல் பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டிற்கு ஏராளமான வெளி மாவட்ட வியாபாரிகள் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் தக்காளி வாங்க வந்திருந்ததால், விவசாயிகள் தக்காளிகளை மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
தக்காளி மார்க்கெட்டிற்கு வழக்கமாக தினமும் 50 டன் தக்காளி மட்டுமே வரும். ஆனால் நேற்று 100 டன் தக்காளி விற்பனைக்கு வந்தது. மேலும் 14 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி 35 ரூபாயில் இருந்து 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரு கூடை தக்காளி 120 ரூபாய் வரை விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
Related Tags :
Next Story