ரேஷன் கடைக்கு வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்


ரேஷன் கடைக்கு வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்
x
தினத்தந்தி 24 May 2021 2:34 AM IST (Updated: 24 May 2021 2:42 AM IST)
t-max-icont-min-icon

விடுமுறை நாள் என்பதை அறியாமல் ரேஷன் கடைக்கு வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

கூடலூர்,

நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான மலைக்கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் ரேஷன் பொருட்களை பெற நீண்ட தொலைவில் உள்ள நகர பகுதிகளுக்கு வந்து செல்ல வேண்டி உள்ளது. இதற்காக ஆட்டோ, ஜீப் உள்ளிட்ட வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இன்று(திங்கட்கிழமை) முதல்  தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் மற்றும் நேற்று ஆகிய 2 நாட்கள் அனைத்து கடைகளையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை நாள் என்பதால் திறக்கப்படவில்லை.

இதற்கிடையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க நகர பகுதிகளுக்கு வந்த மக்கள், ரேஷன் பொருட்களையும் வாங்கி செல்ல திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கடைகள் திறக்கப்படாததால், அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

குறிப்பாக முதுமலை ஊராட்சியில் வசிக்கும் மக்கள் பல கிலோ மீட்டர் தொலைவில் போஸ்பாரா என்ற இடத்தில் உள்ள ரேஷன் கடைக்கு விடுமுறை நாள் என்று தெரியாமல் பொருட்கள் வாங்க வந்தனர். ஆனால் கடை திறக்கப்படாததால், அவர்கள் திரும்பி சென்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- முழு ஊரடங்கில் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தி உள்ளனர். இதை மீறி வெளியே வந்தால், போலீசார் நடவடிக்கை எடுக்கின்றனர். முழு ஊரடங்கில் ரேஷன் கடைகள் வழக்கம் போல செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 

ஆனால் ரேஷன் கடைகள் நீண்ட தொலைவில் உள்ளதால், பொருட்கள் வாங்க வரும்போது போலீசார் கெடுபிடி செய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் வாகனங்களை பயன்படுத்த முடியாத நிலை இருக்கிறது. இதை தவிர்க்க இன்று(நேற்று) ரேஷன் கடைகளை திறந்திருந்தால், பொருட்களை வாங்கி சென்றிருப்போம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story