நீலகிரி மாவட்டத்தில் இருந்து வெளியூர்களுக்கு 175 அரசு பஸ்கள் இயக்கம்
நீலகிரி மாவட்டத்தில் இருந்து வெளியூர்களுக்கு 175 அரசு பஸ்கள் இயக்கப்பட்டது.
ஊட்டி,
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 31-ந் தேதி வரை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதைதொடர்ந்து நேற்று முன்தினம் மற்றும் நேற்று அரசு, தனியார் பஸ்களை இயக்க தமிழக அரசு அனுமதித்தது.
ஒரு வாரம் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலுக்கு வருவதால், பிற மாவட்டங்களில் இருந்து வந்து நீலகிரி மாவட்டத்தில் தங்கி பணிபுரிந்து வருபவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இதனால் ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. நேற்று முன்தினம் பயணிகள் கூட்டம் இல்லாததால் மிகவும் குறைந்த பஸ்களே இயக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று ஊட்டியில் இருந்து குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், கூடலூர் மற்றும் கிராமப்புறங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்களை வாங்க கிராமங்களில் இருந்து பொதுமக்கள் பஸ்களில் வந்தனர்.
ஊட்டி-தலைகுந்தா இடையே தனியார் மினி பஸ்கள் இயக்கப்பட்டது. ஊட்டி-காந்தல் இடையே நகர பஸ்கள் இயக்கப்பட்டன. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-
நீலகிரி கோட்டத்தில் 6 போக்குவரத்து பணிமனைகளில் இருந்து 175 அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. ஊட்டியில் இருந்து திருப்பூர், கோவை, ஈரோடு, திருச்சி ஆகிய பிற மாவட்டங்கள் மற்றும் நீலகிரியில் உள்ள கிராமப்புறங்களுக்கு இயக்கப்பட்டன.
ஊட்டியில் இருந்து சமவெளி பகுதிகளுக்கு செல்லும் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. பிற மாவட்டங்களில் இருந்து ஊட்டிக்கு வந்த பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது.
இன்று (அதாவது நேற்று) இரவுக்குள் அரசு பஸ்கள் போக்குவரத்து பணிமனைகளுக்கு திரும்பி வரும்படி டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story