சேலத்தில் இருந்து வெளியூர்களுக்கு 2-வது நாளாக அரசு பஸ்கள் இயக்கம்
சேலத்தில் இருந்து வெளியூர்களுக்கு 2-வது நாளாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
சேலம்:
சேலத்தில் இருந்து வெளியூர்களுக்கு 2-வது நாளாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
பஸ்கள் இயக்கம்
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. அதேசமயம் பொதுமக்கள் நலன் கருதி நேற்று முன்தினம் மாலையிலும், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் பஸ்கள் இயக்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்படி சேலம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் குறிப்பிட்ட அளவிலான அரசு பஸ்கள் முக்கிய ஊர்களுக்கு மட்டுமே இயக்கப்பட்டன.
குறைவான பயணிகள்
சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நாமக்கல், திருச்சி, ஈரோடு, கோவை, திருப்பூர், சென்னை, கடலூர், வேலூர், மதுரை, சிதம்பரம், திருவண்ணாமலை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு நேற்று 2-வது நாளாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் மிகவும் குறைவான பயணிகளே பஸ்களில் அமர்ந்து இருந்தனர்.
சேலத்தில் தங்கியிருந்த வெளியூர் நபர்கள் மட்டும் தங்களது சொந்த ஊர்களுக்கு பஸ்களில் புறப்பட்டு சென்றதை காண முடிந்தது. ஒரு சிலர் மூட்டை முடிச்சுகளுடன் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். காலை முதல் மாலை வரையிலும் புதிய பஸ் நிலையத்தில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. அதே சமயம் சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஜங்ஷன் ெரயில் நிலையத்திற்கு அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன. சுமார் 30 சதவீதம் டவுன் பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. பயணிகள் முக கவசம் அணிந்து பயணம் செய்தனர்.
பெண்கள் இலவச பயணம்
தமிழக அரசு உத்தரவுப்படி அரசு டவுன் பஸ்களில் பெண்கள் டிக்கெட் எடுக்காமல் இலவசமாக பயணம் மேற்கொண்டனர். அதேசமயம் தனியார் பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை.
சேலம் பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்களில் போக்குவரத்து கழக அதிகாரிகள் நின்று கொண்டு முககவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடிக்குமாறு பயணிகளுக்கு அவ்வப்போது அறிவுரை வழங்கினர். அதனைத் தொடர்ந்து இரவு படிப்படியாக அரசு பஸ்கள் அனைத்தும் அந்தந்த பகுதியில் உள்ள போக்குவரத்து கழக பணிமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. மறு உத்தரவு வரும் வரை அரசு பஸ்கள் சேவை இயக்கப்படாது என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story