இன்று முதல் முழு ஊரடங்கு இறைச்சி, மீன் கடைகளில் விற்பனை அமோகம்
இன்று முதல் முழு ஊரடங்கு காரணமாக நேற்று இறைச்சி, மீன் கடைகளில் விற்பனை மும்முரமாக நடந்தது.
சேலம்:
இன்று முதல் முழு ஊரடங்கு காரணமாக நேற்று இறைச்சி, மீன் கடைகளில் விற்பனை மும்முரமாக நடந்தது.
இறைச்சி கடைகள்
கொரோனா பரவலை தடுக்க இன்று (திங்கட்கிழமை) முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இறைச்சி கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகரில் நேற்று காலை 6 மணிக்கு அனைத்து இறைச்சி கடைகளும் திறக்கப்பட்டன. நேற்று விடுமுறை தினம் என்பதால் இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பொதுமக்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து இறைச்சி வாங்கிச் சென்றனர். ஒரு கிலோ ஆட்டிறைச்சி ரூ.700 வரைக்கும், ஒரு கிலோ பிராய்லர் கோழி ரூ.180 முதல் 200 வரைக்கும், நாட்டுக்கோழி ரூ.300 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.
விற்பனை மும்முரம்
அழகாபுரம், அஸ்தம்பட்டி, சூரமங்கலம், பெரமனூர், அம்மாபேட்டை, குகை, நெத்திமேடு, கன்னங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் இறைச்சி கடைகளில் வழக்கத்தைவிட இறைச்சி விற்பனை அதிகமாக நடைபெற்றது.
இதேபோல் சூரமங்கலம் மீன் மார்க்கெட்டிலும் மீன்கள் வாங்க பொதுமக்கள் அதிகளவில் வந்தனர். பழைய பஸ் நிலையம், செவ்வாய்பேட்டை, குகை, தாதகாப்பட்டி உள்ளிட்ட பகுதியில் உள்ள மீன் கடைகளில் நேற்று மீன் விற்பனை களை கட்டியது. பொதுமக்களும் தங்களுக்கு தேவையான அயிலை, ஜிலேபி, பாறை, வஞ்சிரம், நெத்திலி, ஊளி உள்ளிட்ட பல வகையான மீன்களை வாங்கி சென்றனர்.
Related Tags :
Next Story