சேலத்தில் சலூன் கடைகள் திறப்பு
சேலத்தில் நேற்று சலூன் கடைகள் திறக்கப்பட்டன.
சேலம்:
தமிழகத்தில் இன்று முதல் ஒரு வாரம் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரையிலும், நேற்று காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும் மளிகை, காய்கறி உள்ளிட்ட அனைத்து கடைகளும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதன் காரணமாக சேலம் மாநகரில் நேற்று முன்தினம் மாலை 4 மணியில் இருந்து மூடப்பட்டிருந்த சலூன் கடைகள் திறக்கப்பட்டன.
இது குறித்து தகவலறிந்த இளைஞர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள சலூன் கடைகளுக்கு சென்று முடி திருத்தம் மற்றும் முக சவரம் செய்து கொண்டனர். இதை தொடர்ந்து நேற்று காலையிலும் வழக்கம்போல் சலூன் கடைகள் திறக்கப்பட்டன. சூரமங்கலம், அழகாபுரம், அஸ்தம்பட்டி, தாதகப்பட்டி, அம்மாபேட்டை, அன்னதானப்பட்டி, செவ்வாய்பேட்டை, பழைய மற்றும் புதிய பஸ் நிலையம், பொன்னம்மாபேட்டை, கன்னங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் சலூன் கடைகள் திறக்கப்பட்டதால் அனைத்து கடைகளிலும் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அப்போது இளைஞர்களும், முதியவர்களும் அதிகளவில் முடியுடனும் தாடியுடனும் வந்திருந்தனர். பின்னர் வாடிக்கையாளர்கள் நீண்ட நேரம் காத்திருந்து முடி திருத்தம் மற்றும் முக சவரம் செய்து கொண்டனர். கொரோனா பரவல் காரணமாக சலூன் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இந்நிலையில், நேற்று சலூன் கடைகள் திறக்கப்பட்டதால் முடி திருத்தம் செய்யவும் முக சவரம் செய்யவும் கடைகளில் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.
Related Tags :
Next Story