ஈரோடு மாவட்டத்தில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற 2,185 படுக்கைகள் தயார்- அமைச்சர் சு.முத்துசாமி தகவல்


ஈரோடு மாவட்டத்தில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற 2,185 படுக்கைகள் தயார்- அமைச்சர் சு.முத்துசாமி தகவல்
x
தினத்தந்தி 24 May 2021 5:43 AM IST (Updated: 24 May 2021 5:43 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற 2 ஆயிரத்து 185 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற 2 ஆயிரத்து 185 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார். 
அமைச்சர் ஆய்வு
பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டு வரும் கூடுதல் படுக்கை வசதிகளுடன் கூடிய கட்டிட பணிகளை, தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டம் மட்டும் அல்லாமல் அருகாமையில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் மக்கள் சிகிச்சைக்காக வருவதால் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதிகள் தேவைப்படுகிறது.
இதனால், மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக 300 படுக்கைகளுடன் கூடிய கட்டிடத்திற்கான பணிகளும், ரோட்டரி சங்கம் சார்பில் 400 எண்ணிக்கையிலான கூடுதல் படுக்கை வசதியுடன் கூடிய கட்டிடமும் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
2,185 படுக்கைகள் தயார்
மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, இதுவரை 6 லட்சத்து 34 ஆயிரத்து 58 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா நோயாளிகளுக்காக அரசு மருத்துவமனைகள், தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்கள், தனியார் மருத்துவமனைகளில் தற்போது 2 ஆயிரத்து 185 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் 120 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டும், தொற்றால் பாதிக்கப்பட்ட 6 ஆயிரத்து 558 பேர் வீட்டு தனிமையிலும் உள்ளனர். எனவே, அனைத்து தரப்பு மக்களும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளான முககவசம் அணிதல், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்தல் மற்றும் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல் ஆகியவற்றை கட்டாயம் கடைபிடித்தால் மட்டுமே, இந்த கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் முழுமையான வெற்றி பெற முடியும்.
இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

Next Story