ஈரோடு மாவட்டத்தில் ஆன்லைன் வணிகம் மூலமாக லட்சக்கணக்கான ரூபாய் மோசடி- போலீசார் தீவிர விசாரணை


ஈரோடு மாவட்டத்தில் ஆன்லைன் வணிகம் மூலமாக லட்சக்கணக்கான ரூபாய் மோசடி- போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 24 May 2021 5:44 AM IST (Updated: 24 May 2021 5:44 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் ஆன்லைன் மூலமாக முதலீடு பெற்று லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் ஆன்லைன் மூலமாக முதலீடு பெற்று லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆன்லைன் முதலீடு
ஆன்லைனில் முதலீடு செலுத்தினால் அதிக லாபம் பெறலாம் என்று சமூக வலைதளங்களில் அதிகமான தகவல் பரப்பப்படுகிறது. இதை நம்பிய பலர் முதலீடு செய்து வருவதுடன், பலருக்கும் பகிர்ந்து வருகின்றனர். இதன் காரணமாக பல்வேறு மோசடி சம்பவங்கள் நடந்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ் அப், முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் ‘ஷேர் லைப்’ என்ற தகவல் பரவி வந்தது. அதற்கான செயலியில் சென்று பார்த்தால், குறிப்பிட்ட தொகை முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்ற தகவல் உள்ளது. அதை நம்பி பலரும் முதலீடு செய்து உள்ளார்கள். குறிப்பிட்ட தொகையை முதலீட்டாளர்களுக்கு திரும்ப கொடுத்து வந்த அந்த நிறுவனம் திடீரென ஆன்லைனில் செயல்படாமல் நின்றது. இதனால் பணத்தை செலுத்தியவர்கள் திரும்ப பெற முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள்.
ரூ.65 ஆயிரம்
இந்த ஆன்லைன் மோசடி தொடர்பாக ஈரோடு மாவட்ட போலீசில் பாதிக்கப்பட்டவர்கள் ஆன்லைன் மூலமாக புகார் அளித்து வருகிறார்கள். இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து ஆப்பக்கூடல் பகுதியை சேர்ந்த பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கூறியதாவது:-
எனது வாட்ஸ்அப் செயலிக்கு ‘ஷேர் லைப்’ என்ற தகவல் வந்தது. அதில் முதலில் ரூ.300 என சிறிய தொகையை முதலீடு செய்தேன். அதன் மூலமாக எனக்கு ஒரு தொகை கிடைத்தது. மேலும், எனது நண்பர்களுக்கு பகிர்ந்ததன் மூலமாகவும் எனக்கு தொகை வழங்கப்பட்டது. இந்தநிலையில் கொரோனா நோயாளிகளுக்காக ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு ஒரு திட்டம் உள்ளதாகவும், அதற்கு முதலீடு செய்வதன் மூலம் அதிகமான லாபம் பெறலாம் என்றும், கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவி செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. அதை நம்பி நான் ரூ.65 ஆயிரம் முதலீடு செய்து உள்ளேன்.
மோசடி
என்னை போலவே ஏராளமானவர்கள் லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை ஆன்லைனில் முதலீடு செய்து உள்ளார்கள். அதற்கான பணம் எங்களது கணக்கின் வாலட்டில் வந்தாலும், அதை வங்கி கணக்குக்கு மாற்ற முடியவில்லை. அந்த இணையதளம் தற்போது செயல்படாமல் முடங்கி கிடக்கிறது. எனவே ஆன்லைன் மூலமாக மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எங்களது பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் ஏராளமானவர்கள் அதில் முதலீடு செய்து இருக்கிறார்கள். அனைவரும் பணத்தை திரும்ப எடுக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story