தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு: ஈரோடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை கிடுகிடு உயர்வு
தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் காய்கறிகளின் விலையை கிடுகிடுவென உயர்த்தி வியாபாரிகள் விற்பனை செய்தனர்.
ஈரோடு
தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் காய்கறிகளின் விலையை கிடுகிடுவென உயர்த்தி வியாபாரிகள் விற்பனை செய்தனர்.
காய்கறிகள் விற்பனை
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் இன்று (திங்கட்கிழமை) முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
இதில் காய்கறி மார்க்கெட்டுகள், கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதற்கு மாற்றாக வாகனங்கள் மூலமாக வீடு வீடாக காய்கறிகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது. மேலும், நேற்று ஒருநாள் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் செயல்படும் நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்தே காய்கறிகளின் வியாபாரம் மும்முரமாக நடந்தது.
பல்வேறு பகுதிகளில் உள்ள கடைக்காரர்கள் வந்து மொத்தமாக காய்கறிகளை வாங்கி சென்றார்கள். இதேபோல் பொதுமக்களும் ஏராளமானவர்கள் நேற்று அதிகாலையிலேயே திரண்டார்கள்.
விலை கடும் உயர்வு
ஒரு வாரத்துக்கு தேவையான காய்கறிகளை பொதுமக்கள் பலர் மொத்தமாக வாங்கி சென்றார்கள். இதனால் காய்கறிகளின் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.
அதேசமயம் காய்கறிகளின் விலையையும் கிடுகிடுவென வியாபாரிகள் உயர்த்தினார்கள்.
நேற்று முன்தினம் காய்கறிகளை வாங்கிவிட்டு நேற்று சந்தைக்கு வந்த மக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தார்கள். அந்த அளவுக்கு விலையை உயர்த்தி விற்பனை செய்யப்பட்டது.
நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி, கத்தரிக்காய் உள்பட அனைத்து வகையான காய்கறிகளும் 3 முதல் 5 மடங்கு விலை உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிலோ தக்காளி ரூ.30 முதல் ரூ.50 வரையும், சின்ன வெங்காயம் ரூ.80-க்கும், பெரிய வெங்காயம் ரூ.40-க்கும், உருளைக்கிழங்கு ரூ.30-க்கும், கருணை கிழங்கு ரூ.60-க்கும், இஞ்சி ரூ.60-க்கும், கத்தரிக்காய் ரூ.80-க்கும், வெண்டைக்காய் ரூ.80-க்கும், பச்சை மிளகாய் ரூ.160-க் கும் விற்பனை செய்யப்பட்டது.
நடவடிக்கை இல்லை
இதுகுறித்து காய்கறிகளை வாங்க வந்த பொதுமக்கள் கூறியதாவது:-
தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு காரணமாக கடைகள் செயல்படாது என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. வாகனங்கள் மூலமாக வீதி வீதியாக காய்கறிகள் கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இருந்தாலும், 4 நாட்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி கொள்ளலாம் என்று மார்க்கெட்டுக்கு வந்தோம். ஆனால் மார்க்கெட் பகுதியிலேயே இவ்வளவு விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கவில்லை. அப்படியென்றால் வீதிகளில் உள்ள கடைகளில் விலை எவ்வளவு இருக்கும்.
விலை உயர்வை தடுக்க எந்த அதிகாரிகளும் நடவடிக்கையும் எடுக்கவில்லை, வியாபாரிகளுக்கு ஆலோசனையும் வழங்கவில்லை. இதன்காரணமாக வியாபாரிகளே ஒவ்வொரு விலை நிர்ணயித்து விற்பனை செய்கிறார்கள்.
காய்கறி மார்க்கெட்டிலேயே ஒரு இடத்தில் கத்தரிக்காய் ரூ.60-க்கும், மற்றொரு இடத்தில் ரூ.80-க்கும், இன்னொரு இடத்தில் ரூ.120-க்கும் விற்பனை செய்ததை காணமுடிந்தது.
இவ்வாறு அவர்கள் வேதனையுடன் கூறினார்கள்.
Related Tags :
Next Story