தேனி மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேர் கொரோனாவுக்கு பலி
தேனி மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.
தேனி:
தேனி மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
தேனி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளவரசன் (வயது 52) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 19-ந்தேதி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். அவருடைய சொந்த ஊர் போடி. அவருக்கு தனம் என்ற மனைவியும், கலாதேவி என்ற மகளும் உள்ளனர்.
இதுபோல், கொரோனா பாதிப்புடன் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆண்டிப்பட்டியை சேர்ந்த 47 வயது ஆண், பெரியகுளம் தென்கரையை சேர்ந்த 64 வயது மூதாட்டி, தேனியை சேர்ந்த 49 வயது ஆண், சின்னமனூரை சேர்ந்த 52 வயது ஆண், போடியை சேர்ந்த 49 வயது ஆண் ஆகிய 5 பேரும் சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் உயிரிழந்தனர்.
541 பேருக்கு தொற்று
இதற்கிடையே தேனி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 541 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 32 ஆயிரத்து 541 ஆக உயர்ந்தது. பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 278 பேர் நேற்று குணமாகினர். சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்து 973 ஆக உள்ளது. இவர்களில் 609 பேர் செயற்கை ஆக்சிஜன் சுவாசம் அளிக்கப்பட்டும், 68 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story