சங்கீத கலைஞர்களின் வாழ்க்கையை சங்கடமாக்கிய கொரோனா ஊரடங்கு அரசின் நிவாரணத்துக்காக காத்திருக்கிறார்கள்
சங்கீத கலைஞர்களின் வாழ்க்கையை சங்கடமாக்கி உள்ளது ‘கொரோனா ஊரடங்கு’. அரசின் நிவாரணத்துக்காக அவர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.
திருக்கடையூர்:-
சங்கீத கலைஞர்களின் வாழ்க்கையை சங்கடமாக்கி உள்ளது ‘கொரோனா ஊரடங்கு’. அரசின் நிவாரணத்துக்காக அவர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.
சங்கீத கலைஞர்களின் வாழ்வாதாரம்
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு தினந்தோறும் பல்வேறு சிறப்பு யாக பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதில் வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆயுட்ஹோமம், மணி விழா, சஷ்டியப்தபூர்த்தி உள்ளிட்ட பூஜைகள் இங்கு நடைபெறுவது சிறப்பம்சமாக கருதப்படுகிறது. இந்த பூஜைகளின்போது நாதஸ்வரம், தவில் இசைக்கப்படும். இதன் மூலமாக சங்கீத கலைஞர்கள் வருமானம் ஈட்டி வாழ்க்கை நடத்தி வந்தனர். சங்கீத கலைஞர்களின் வாழ்வாதாரமாக அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நடைபெறும் யாக பூஜைகள் இருந்து வந்தன.
முழு ஊரடங்கு
இந்த நிலையில் தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் யாக பூஜைகள் எதுவும் நடைபெறாத நிலையில், சங்கீத கலைஞர்களின் வாழ்க்கை சங்கடமாகி உள்ளது. வருமானம் இல்லாமல் சங்கீத கலைஞர்கள் அரசின் நிவாரணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
இதுகுறித்து திருக்கடையூர் பகுதியை சேர்ந்த நாதஸ்வர கலைஞர்கள் கூறியதாவது:-
அமிர்தகடேஸ்வரர் கோவிலில் திருமணம் மற்றும் பூஜைகளுக்கு நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்கள் மங்கள இசை வாசித்து வந்தோம். இந்த கோவிலை நம்பி 50-க்கும் மேற்பட்ட சங்கீத கலைஞர்கள் வாழ்க்கை நடத்தி வருகிறோம்.
நிவாரணத்தொகை
இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கால் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன. திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலும் மூடப்பட்டுள்ளதால், கோவிலை நம்பி வாழ்க்கை நடத்தி வந்த சங்கீத கலைஞர்களான நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.
இசையால் மக்களை மகிழ்வித்த சங்கீத கலைஞர்களின் வாழ்க்கையை கொரோனா ஊரடங்கு சங்கடமாக்கி உள்ளது. எனவே வேலையின்றி தவித்து வரும் நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்களுக்கு கொரோனா ஊரடங்கு காலம் முடியும் வரை அரசு உரிய நிவாரணத்தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story