அனைத்து கடைகளும் மூடப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடின
அனைத்து கடைகளும் மூடப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடின
கோவை
தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு காரணமாக அனைத்து கடை களும் நேற்று மூடப்பட்டன. பொதுமக்கள் வீடுகளில் முடங்கியதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
கொரோனா தொற்று
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. எனவே கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று முதல் ஒரு வாரம் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
இதனால் நேற்று கோவையில் உள்ள ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர் உழவர் சந்தைகள், டி.கே. மார்க்கெட், அண்ணா மார்க்கெட் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சில்லரை மற்றும் மொத்த காய்கறி கடைகள், மளிகை கடைகள் மூடப்பட்டு இருந்தன.
இதனால் அந்த பகுதிகள் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. நாட்டு மருந்து கடைகள், மெடிக்கல்கள் மட்டும் திறந்து இருந்தன.
உணவகங்களில் பார்சல்
தொழிலாளர்கள், விடுதிகளில் தங்கி உள்ளவர்களின் வசதிக்காக உணவகங்கள் மட்டும் திறந்து இருந்தன. அங்கு பார்சல் மட்டுமே வழங்க அனுமதி இருந்தது.
இதனால் காலை 6 மணி முதல் பகல் 10 மணி வரையும், பகல் 12 மணி முதல் 3 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே உணவகங்களில் பார்சல் வழங்கப்பட்டது.
அதை உணவுகளை பெற ஆன்மூலம் பதிவு செய்தவர்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியில் சில தனியார் உணவு நிறுவனங்களின் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
முழு ஊரடங்கு காரணமாக அவினாசி ரோடு மேம்பாலம், காந்திபுரம் மேம்பாலம், வடகோவை மேம்பாலம் உள்ளிட்ட மேம்பாலங்களில் வாகனங்கள் செல்ல முடியாதபடி இரும்பு தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு இருந்தது.
மேலும் அவினாசி ரோடு, திருச்சி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு சாலைகளில் தடுப்புகள் வைக்கப்பட்டு இருந்தது.
ஊரடங்கை மீறி வெளியே வரும் வாகனங்களை தணிக்கை செய்வதற்காகவும், பொதுமக்களின் நடமாட்டத்தை
கண்காணிப்பதற்காகவும் மாநகரில் 1,400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்காக கோவையில் லட்சுமி மில் சிக்னல், ஹோப்காலேஜ், ராமநாதபுரம் சிக்னல், சிங்காநல்லூர், ஆர்.எஸ்.புரம் நால்ரோடு சந்திப்பு உள்பட 23 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது.அங்கு போலீசார் நேற்று காலை 5 மணி முதல் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அவர்கள் அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி எங்கு செல்கிறீர்கள், இ-பதிவு உள்ளதா?, எங்கிருந்து வருகிறீர்கள் என்று விசாரித்தனர். அப்போது தேவையின்றி வந்தவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வெறிச்சோடிய சாலைகள்
மேலும் நகரின் பல்வேறு சாலைகளில் வாகனங்கள் செல்வதை தடுக்கும் வகையில் போலீசார் தடுப்பு வைத்து அடைத்து உள்ளனர். மேலும் அரசின் அறிவுறுத்தல்படி பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கினர்.
இதன் காரணமாக கோவை மாநகரம் வெறிச்சோடி காணப்பட்டது. வாகனங்கள் ஏதும் செல்லாததால் அவினாசி ரோடு, திருச்சி ரோடு, சத்தி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, ஒப்பணக்கார வீதி, பெரிய கடை வீதி, 100 அடி ரோடு, கிராஸ்கட் ரோடு, ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோடு, தடாகம்ரோடு, மருதமலை ரோடு, உள்ளிட்ட சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
Related Tags :
Next Story