அனைத்து கடைகளும் அடைப்பு சாலைகள் வெறிச்சோடின


அனைத்து கடைகளும் அடைப்பு சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 24 May 2021 9:58 PM IST (Updated: 24 May 2021 9:58 PM IST)
t-max-icont-min-icon

தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததையொட்டி அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. வாகன போக்குவரத்து இல்லாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. தற்காலிக சோதனை சாவடி அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி

தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததையொட்டி அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. வாகன போக்குவரத்து இல்லாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. தற்காலிக சோதனை சாவடி அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

கடைகள் அடைப்பு

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதை கட்டுப்படுத்த கடந்த 10-ந்தேதி முதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்தது. 

இதன் காரணமாக மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் காலை 10 மணி திறந்து இருக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இதற்கிடையில் ஊரடங்கை மீறி கடைகளில் தினமும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து  தளர்வுகள் இல்லாத முழுஊரடங்கு அமலுக்கு வந்தது. 

இதன் காரணமாக மளிகை, காய்கறி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

கண்காணிப்பு

பால் வினியோகம், மருத்துவம் சார்ந்த துறைகள் வழக்கம் போல் செயல்பட்டன. அனைத்து கடைகளும் மூடப்பட்டதால் மார்க்கெட் ரோடு, மீன்கரை ரோடு, கோவை ரோடு, உடுமலை ரோடு, கடை வீதி, சத்திரம் வீதி உள்ளிட்ட முக்கிய சாலைகள் வாகன போக்குவரத்து குறைந்ததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. 

திரு.வி.க. மார்க்கெட், காந்தி மார்க்கெட், தேர்நிலை திடல் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் காய்கறி மார்க்கெட்டுகளும் மூடப் பட்டன. மேலும் அரசு, தனியார் பஸ்கள் ஓடாததால் பழைய, புதிய பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

சோதனை சாவடி 

பொள்ளாச்சி சரக பகுதிகளில் ஊரடங்கை கடுமையாக்கும் வகையில் பல்லடம் ரோடு 5 ரோடுகள் சந்திப்பு, மரப்பேட்டை வீதி, மெட்ராஸ் ரோடு சந்திப்பு, ஜமீன்ஊத்துக்குளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்காலிக சோதனை சாவடி அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.  

தேவையில்லாமல் சாலைகளில் சுற்றி திரிந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 

போலீசார் கண்காணிப்பு பணியை போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார் ஆய்வு செய்தார். இதே போன்று வால்பாறை சரகத்தில் ஆனைமலை, கோட்டூர், ஆழியாறு பகுதியில் உள்ள சோதனை சாவடிகளில் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் நேரில் ஆய்வு செய்தார். 

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

அபராதம், வழக்குப்பதிவு

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தவே தளர்வு இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடைகள் அடைக்கப்பட்டு இருந்தும் சிலர் தேவையில்லாமல் சாலைகளில் சுற்றி திரிகின்றனர். 

வெளி மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்களுக்கு இ-பதிவு ஆவணம் உள்ளதா? என்று சரிபார்த்து அனுப்பி வைக்கப்பட்டது. இ-பதிவு இல்லாத வாகனங்களை மாவட்ட எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் திருப்பி அனுப்பினர். 

மேலும் ஊரடங்கை மீறிய வாகனங்களுக்கு அபராதம் மற்றும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதற்கிடையில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடைகள் செயல் படுகிறதா? என்று வருவாய்த்துறை, போலீசார், நகராட்சி அதிகாரிகள் கொண்ட சிறப்பு பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

இதேபோன்று ஆனைமலை, கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் மருந்து கடைகள், பால் வினியோக கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

வால்பாறையில் வாகன சோதனை

வால்பாறை பகுதியில் முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப் பட்டது. மருத்துவ தேவைகளுக்கு தவிர வேறு யாரும் வெளியே நடமாடவில்லை. வால்பாறை நகர் பகுதி மற்றும் அனைத்து எஸ்டேட் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. 

வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்வரி தலைமையில் வால்பாறை நகரில் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே தடுப்புகள் வைத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

வால்பாறை நகராட்சி சார்பில் வால்பாறை நகர் பகுதி மற்றும் எஸ்டேட் பகுதியில் பொது மக்களின் நடமாட்டத்தை குறைக்க காய்கறி மற்றும் பழங்கள் அந்தந்த எஸ்டேட் பகுதிகளுக்கே வாகனங்களில் கொண்டு சென்று விற்பனை செய்வதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறது. 


Next Story