கம்பாலப்பட்டி ஊராட்சியில் சீரான குடிநீர் வினியோகம் செய்ய கோரி பொதுமக்கள் கோரிக்கை
பொள்ளாச்சி அருகே உள்ள கம்பாலப்பட்டி ஊராட்சியில் சீரான குடிநீர் வினியோகம் செய்ய கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே உள்ள கம்பாலப்பட்டி ஊராட்சியில் சீரான குடிநீர் வினியோகம் செய்ய கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
குடிநீர் தட்டுப்பாடு
பொள்ளாச்சி அருகே உள்ளது கம்பாலப்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சி கட்டுப்பாட்டில் கம்பாலப்பட்டி, பாறைமடையூர், பூவல பருத்தி, கோடாங்கிபட்டி, அரசூர், ரெட்டியார் நகர், குருசாமியூர், அமணலிங்காபுரம், குள்ளேகவுண்டன்புதூர் ஆகிய கிராமங்கள் உள்ளன.
ஆழியாற்றில் இருந்து தண்ணீரை எடுத்து சுத்திகரித்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இதற்காக கம்பாலப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து, புதிதாக குழாய் பதிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் கடந்த 50 நாட்களுக்கு மேலாகியும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கவில்லை.
இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஊராட்சி நிர்வாகத்தினர் குடிநீரை விலைக்கு வாங்கி லாரி மூலம் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
இதுகுறித்து அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-
சீரான குடிநீர்
ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்டது கம்பாலப்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சி பகுதிக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.
தற்போது மோட்டார் பழுது காரணமாக 50 நாட்களாக குடிநீர் வரவில்லை. கொரோனா காலத்தில் சுகாதாரமான குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றோம்.
ஊராட்சி மூலம் ஒரு குடும்பத்துக்கு 12 லிட்டர் அளவு கொண்ட 15 குடம் தண்ணீர் வழங்கி வருகின்றனர். இதுகுறித்து அமுல்கந்தசாமி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. எனவே சீரான குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதுபற்றி வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ. அமுல்கந்தசாமி கூறியதாவது:-
2 நாட்களில் வழங்கப்படும்
கம்பாலப்பட்டி ஊராட்சியில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டு உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து ஆழியாறில் உள்ள நீரேற்று நிலையத்திற்கு சென்று ஆய்வு நடத்தப்பட்டது.
அப்போது குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் கேட்டதற்கு தொழில்நுட்ப அனுமதி கிடைக்கவில்லை என்றனர். உடனே மாவட்ட கலெக்டரிடம் பேசி அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
2 நாட்களில் புதிதாக மோட்டார் பொருத்தப்பட்டு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story