மாணவர்களின் நலன் கருதி பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு தேர்வு நடத்துவது நல்லது மாநில கல்வி மந்திரிகள் கூட்டத்தில் சுரேஷ்குமார் பேச்சு
மாணவர்களின் நலன் கருதி பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு தேர்வு நடத்துவது நல்லது என்று மாநில கல்வி மந்திரிகள் கூட்டத்தில் சுரேஷ்குமார் கூறினார்.
பெங்களூரு,
மத்திய மனித வளத்துறை அமைச்சகம், நேற்று அனைத்து மாநில பள்ளி கல்வித்துறை மந்திரிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தியது. இதில் கர்நாடக பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பெங்களூருவில் இருந்தபடி காணொலியில் கலந்து கொண்டார். இதில் அவர் பேசியதாவது:-
தொழிற்கல்வியில் சேர பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு தேர்வு மிக முக்கியமானவை. அதனால் மாணவர்களின் நலன் கருதி ஏதாவது ஒரு வடிவத்தில் தேர்வை நடத்த வேண்டியது அவசியம். கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததும், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு தேர்வை நடத்த வேண்டும்.
தற்போதைய நிலையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. இந்த கொரோனா பரவல் குறைந்ததும் மாணவர்களுக்கு 15 நாட்களுக்கு காலஅவகாசம் வழங்கி தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வில் தோல்வி அடைந்தால், அத்தகைய மாணவர்களுக்கு மீண்டும் ஒரு முறை தேர்வு நடத்தப்படும். தேர்வு முறைகளை எளிமைபடுத்த வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள்.
அதற்கு 45 நாட்கள் காலஅவகாசம் வேண்டும். கர்நாடகத்திற்கு கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவலுக்கு மத்தியிலும் 10-ம் வகுப்பு தேர்வை வெற்றிகரமாக நடத்திய அனுபவம் உள்ளது. அதனால் இந்த முறை பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு தேர்வை நடத்துவதில் பெரிய சிரமம் இருக்காது என்றே தோன்றுகிறது.
மாணவர்களின் நலன் கருதி தேர்வு நடத்துவது குறித்து உரிய முடிவை வரும் நாட்களில் எடுப்போம். இந்த தேர்வுக்கான கேள்வித்தாள்களை தயாரித்து விட்டோம். தேர்வு மையங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளோம். தேர்வை உரிய பாதுகாப்பாக நடத்த தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
ஜூலை மாதம் தேர்வு நடத்தப்படுவதாக இருந்தால் ஆகஸ்டு மாதம் தேர்வு முடிவுகளை வெளியிடுவோம். அதன் பிறகு தொழிற்படிப்புகளுக்கான நுழைவு தேர்வுகளை மத்திய அரசு நடத்தலாம். இவ்வாறு சுரேஷ்குமார் பேசினார்.
Related Tags :
Next Story