சித்ரதுர்கா அருகே கொரோனா பீதியில் கிராமத்தின் நான்கு திசையிலும் மாந்திரிக தேங்காய்களை தொங்கவிட்ட மக்கள்


சித்ரதுர்கா அருகே கொரோனா பீதியில் கிராமத்தின் நான்கு திசையிலும் மாந்திரிக தேங்காய்களை தொங்கவிட்ட மக்கள்
x
தினத்தந்தி 24 May 2021 10:25 PM IST (Updated: 24 May 2021 10:25 PM IST)
t-max-icont-min-icon

சித்ரதுர்கா அருகே கொரோனா பீதியில் கிராமத்தின் நான்கு திசையிலும் மாந்திரிக தேங்காய்களை கட்டி கிராம மக்கள் தொங்க விட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

சித்ரதுர்கா, 

பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கொரோனாவுக்கு தினமும் மாநிலம் முழுவதும் 400-க்கும் மேற்பட்டோர் பலியாகி வருகிறார்கள். இது கர்நாடக மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. சித்ரதுர்கா மாவட்டத்திலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அந்த மாவட்டத்தில் உள்ள செல்லக்கெரே தாலுகாவில் மன்னேகோடி கிராமம் இருக்கிறது. அந்த கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர்.

அந்த கிராமத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அந்த கிராமத்தில் 450-க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அத்துடன் கொரோனாவுக்கு இதுவரை 10 பேர் தங்களது உயிரை பறி கொடுத்துள்ளனர். மேலும் கடந்த 25 நாட்கள் கொரோனா மற்றும் பிற நோய் தாக்கலுக்கு உள்ளாகி கிராமத்தில் வசித்து வந்த 15 பேர் பலியாகி உள்ளனர்.

இதனால் கிராம மக்கள் கொரோனாவுக்கு பயந்து வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். ஆனாலும் கிராமத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவதால், அதற்கு கோவிலில் பூஜை, மாந்திரிகம் செய்வதில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, கிராமத்தில் உள்ள 4 திசைகளிலும் ஒரு மரக்கம்புகளை நட்டு வைத்துள்ளனர். அதில் துணியில் சுற்றி ஒரு தேங்காயை போட்டு மக்கள் தொடங்க விட்டுள்ளனர்.

இவ்வாறு கிராமத்தின் நான்கு திசைகளிலும் தொங்க விடப்பட்டுள்ள தேங்காய்களை, கிராமத்திற்குள் கொரோனா குறைய வேண்டும், அதனால் எந்த பாதிப்பும் வரக்கூடாது என்ற மாந்திரிகம் செய்து தொங்க விட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இதுபோன்று மாந்திரிகம் மற்றும் பூஜை செய்வதற்கு பதிலாக முகக்கவசம் அணியும்படியும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும்படியும் கிராம மக்களிடம் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Next Story